‘டிராவிட் தலைமையில் பெற்ற வெற்றிக்கு உரிய அங்கீகாரம் இல்லையே?’ – ரவி சாஸ்திரியை விளாசிய சுனில் கவாஸ்கர்

கடந்த 20ஆண்டுகளில் தற்போதுள்ள இந்திய அணியே சிறந்தது என்று பேசிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு பதிலடி கொடுத்த முன்னாள்வீரர் சுனில் கவாஸ்கர், “ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியஅணி வெளிநாடுகளில் பெற்ற வெற்றிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே” என்று விளாசியுள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை மட்டும்வென்ற இந்திய அணி , ஒருநாள், டெஸ்ட் தொடரை இழந்தது. சவுத்தாம்டனில் நடந்த 4-வது டெஸ்ட்போட்டியில் 60 ரன்களிலும், பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் 31 ரன்களிலும் இந்திய அணிதோற்றது.

பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடி இருந்தால் இந்தப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். இந்நிலையில், 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சேவாக், கங்குலி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சனங்களை வைத்தனர். அதற்குப் பதில் அளித்துப் பேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி“கடந்த 20 ஆண்டுகளில் சிறந்த அணி இப்போது கோலி தலைமையில் விளையாடும் அணிதான், குறுகியகாலத்தில் வெளிநாடுகளில் 9 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இதற்கு முன் யார் தலைமையிலும் இப்படிவெற்றி பெற்றார்களா என எனக்கு நினைவில்லை” என்று பெருமை கொண்டார்.

ஆனால், உண்மையில் இதற்கு முன் டிராவிட், கங்குலி, தோனி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் பலசிறப்பான வெற்றிகளைப் பெற்று இருக்கிறது.

இந்நிலையில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பேச்சுக்குப் பதிலடி கொடுத்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

ரவிசாஸ்திரி கூறியது அவரின் கருத்து. இதை நான் மறுக்கவில்லை. ஆனால் சில உண்மைகளையும் அவர ்சேர்த்திருக்க வேண்டும். இப்போதுள்ள இந்திய அணி வெளிநாடுகளில் பெற்ற 9 வெற்றிகளில் 5 வெற்றிகள்இலங்கையில் மட்டும் பெற்றவை என்பதைக் கூறாமல் விட்டுவிட்டார்.

கடந்த 1980களில் இருந்த இந்திய அணி இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளில் சென்று வென்றுள்ளது. ராகுல்டிராவிட் தலைமையில் இந்திய அணி கடந்த 2005-ம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகளில் டெஸ்ட் தொடரைவென்றது, இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டில் டெஸ்ட் தொடரை வென்றது.

முதல்முறையாகத் தென்ஆப்பிரிக்காவை டெஸ்ட் போட்டியில் தோற்கடித்தோம், இவை அனைத்தும் டிராவிட் தலைமையில்நடத்தப்பட்ட மிகச்சிறந்த சாதனைகள். ஆனால், டிராவிட் தலைமையில் கிடைத்த வெற்றிகளுக்கு இதுவரை அளிக்கப்பட்ட அங்கீகாரம் என்பது மிகக்குறைவு என்பது அவருக்குத் தெரியவேண்டும்.

இலங்கையில் சென்று விராட் கோலி தலைமையில் இந்திய அணி பெற்ற வெற்றிகளைக் குறைத்துமதிப்பிடவில்லை. அவர்கள் உள்நாட்டில் வீழ்த்தமுடியாத அளவுக்கு வலிமையான அணி.

அதேசமயம்வெளிநாட்டில் பெற்ற வெற்றிகளைப் பற்றி பேசும் போது, இங்கிலாந்து , தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றிகளையும் கணக்கில் சேர்க்க வேண்டும். இங்கிலாந்தில் டெஸ்ட்தொடரை வென்றுள்ள இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் தொடரைவென்றதில்லை.

இப்போதுள்ள இந்திய அணியின் திறமைக்கு எந்தவிதமான குறைச்சலும் இல்லாத நிலையில், தென்ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது.

எப்போதுமே ஒரு அணியை குறித்த மதிப்பீடு என்பது தொடர் முடிந்தபின்தான் கூற முடியும். ஆனால், டெஸ்ட் தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, அணியின் நிர்வாகம் சிறந்த அணி என்று மதிப்பிடுவது எந்த விதத்தில் சரி எனத் தெரியவில்லை. செப்டம்பர் 12-ம் தேதிக்குப் பின், டெஸ்ட் தொடர் முடிந்தபின்தான்கோலி தலைமையிலான அணி குறித்து மதிப்பிட வேண்டும்.

அதிகமான ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் விளையாடுவதன் விளைவு இப்போது புரிந்திருக்கும். ஒருநாள் போட்டியின் பந்து பிட்ச் ஆகும் திசையை கணித்து விளையாடி வீரர்கள் பழக்கப்பட்டுஇருப்பார்கள்.

ஆனால், டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படும் சிவப்பு பந்து, காற்றில் திசைமாறும் தன்மையுடையது. அதைக் கணித்து பேட் செய்வது கடினமானது. குறிப்பாக சுழற்பந்துகளை எதிர்கொள்ளும் போது கால்களை நகர்த்தி விளையாடுவது அவசியம். கால்களுக்கு வேலைகொடுக்காமல் விளையாடினால், எந்தவித்திலும் அது பேட்ஸ்மேன்களுக்கும் பயன் அளிக்காது, அணிக்கும் பயன்தராது

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

You might also like More from author