டி20 தொடர் நாளை தொடக்கம்- பிரிஸ்பேனில் இந்தியா- ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் நாளை (21-ந்தேதி) நடக்கிறது.

இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. சமீபத்தில் வெஸ்ட்இண்டீஸ்க்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றியதால் நம்பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது சவாலானது.

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலிய அணி சமீப காலங்களில் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் இந்திய வீரர்கள் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி பெறலாம்.

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி மீண்டும் களம் திரும்பி இருக்கிறார். பேட்டிங்கில் தொடர்ந்து நிலையாக ஆடிவரும் அவர் அணியின் முதுகெலும்பாக இருக்கிறார்.

இதேபோல ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் அணியில் உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது முத்திரை பதிக்க கூடியவர்கள்.

ஆஸ்திரேலிய அணி கடந்த 17-ந்தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் தோற்று இருந்தது. அதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று 20 ஓவரிலும் தோற்று ‘ஒயிட் வாஷ்’ ஆகி இருந்தது.

இதனால் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி இந்தியாவை வீழ்த்தும் வேட்கையில் உள்ளது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், கிறிஸ் லின் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், நாதன் கவுல்டர் நைல், ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா போன்ற சிறந்த பவுலர்களும் அந்த அணியில் உள்ளனர்.

 

நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.20 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ், சோனி டென் 3 டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வீரர்கள் விவரம்:-

இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல், கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர்.

You might also like More from author