டீசல் விலை உயர்வு எதிரொலியால் தமிழகத்தில் லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 22% அதிகரிப்பு: அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் அபாயம்

டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 22 சதவீதம் உயர்த்துள் ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 4.50 லட்சம் லாரிகள் உள்ளன. இந்த லாரி களுக்கு அரிசி, பருப்பு வகைகள், இரும்புத் தளவாடங்கள், மரப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள், சிமென்ட் மூட்டைகள் என பல்வேறு வகையான சரக்குகளை வாட கைக்கு புக்கிங் செய்து கொடுக்கும் பணிகளில் லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் மாவட்டந்தோறும் உள்ளனர். தமிழகம் முழுவதும் தினமும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளை லாரிகளுக்கு புக்கிங் செய்து கொடுக்கும் பணியில் 5,600-க்கும் மேற்பட்ட புக்கிங் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து விலை உயர்வு

இதனிடையே, லாரி போக்கு வரத்துக்கு அடிப்படை தேவையான டீசல் விலை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. டீசல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள், லாரி சரக்கு புக்கிங் ஏஜென்ட்டுகள் கடந்த ஜூலை மாதம் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனினும், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக டீசல், பெட் ரோல் விலை தற்போது வரை தொடர்ந்து முன் எப்போதும் இல் லாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று முதல் அமல்

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி சேலம் மாவட்ட லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் சம்மேளன மாநிலத் தலைவர் ராஜ வடிவேல் உள் ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழகம் முழுவதும் சரக்கு புக்கிங் கட்டணத்தை 22 சதவீதம் உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதனை செப். 24-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து புக்கிங் ஏஜென்ட்டுகள் தமிழகம் முழுவதும் சரக்கு புக்கிங் கட்டணத்தை 22 சதவீதம் அதிகரித்து நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்ததாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் சம்மேளன மாநிலத் தலைவர் ராஜ வடிவேல் கூறியதாவது:

கடந்த முறை சரக்கு புக்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டபோது இருந்ததைவிட, தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ.18 வரை உயர்ந்துவிட்டது. மேலும், உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், லாரிகளுக்கான வாடகையை நாங்கள் உயர்த்தி கொடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, சரக்கு புக்கிங் கட்டணத்தை 22 சதவீதம் உயர்த்தி, அது 24-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படுவது குறித்து ஆலை அதிபர்கள், தொழிற்சாலைகள், லாஜிஸ்டிக் நிறுவனத்தினர், வணிகர் சங்கங்கள் என அனைத்து தரப்பினருக்கும் அறிக்கை மூல மாக தெரிவித்துவிட்டோம்.

அதன்படி தமிழகம் முழுவதும் சரக்கு புக்கிங் கட்டணம் உயர்வுக்கு வந்துள்ளது. எனினும், உடடினயாக 22 சதவீதம் கட்டண உயர்வை வணிகர்கள், ஆலை அதிபர்கள் உள்ளிட்டவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், டீசல் விலை நிலவரம் அவர்களுக்கு தெரியும். எனவே, புக்கிங் கட்டணத்தை படிப்படியாக உயர்த்திக் கொடுக்க முடிவு செய்துள்ளனர். சிலர் கட்டணத்தை உயர்த்தியும் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். டீசல் விலை கட்டுப்பாட்டில் வராவிட்டால், 22 சதவீத கட்டண உயர்வு முழுமையாக விரைவில் அமலுக்கு வந்துவிடும்.

இதன் காரணமாக, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்பட அனைத்தும் விலை உயரும். எனவே, மத்திய, மாநில அரசுகள் டீசல் விலையை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும். மேலும், தினமும் விலை நிர் ணயம் செய்வதை தவிர்த்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை டீசல், பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் சம்மேளன மாநி லத் தலைவர் ராஜ வடிவேல் கூறினார்.

மாதத்துக்கு ரூ.30 ஆயிரம் இழப்பு

‘டீசல் விலை அதிகரித்து வருவதால், வாடகையில் டீசலுக்கான செலவு அதிகரித்து வருகிறது. உதாரணமாக, சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பவுதற்கான கட்டணம் டீசல் செலவு ரூ.7,500 ஆக இருந்தது. டீசல் விலை உயர்வு காரணமாக, கூடுதலாக ரூ.1,600 செலவு ஏற்படுகிறது. இதன் காரணமாக, லாரி உரிமையாளர்களுக்கு ஒரு மாதத்தில் ரூ.30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, லாரி உரிமையாளர்களுக்கு நாங்கள் வாடகையை உயர்த்திக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்று லாரி புக்கிங் ஏஜென்ட்டுகள் தெரிவித்தனர்.

You might also like More from author