திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது – அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்கிறேன். சில பொருட்களுக்கு வரி குறைப்பு, வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். ஜி.எஸ்.டி. தொகையினை மத்திய அரசு நிலுவையாக வைத்துள்ளது. அதனை தரவேண்டும் என்று வலியுறுத்துவேன்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறி உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உள்ளது. அதில் எந்த ஒரு குறைவும் வராத அளவுக்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு மசோதாவை நிறைவேற்றும் முன் மாநில அரசிடம் கருத்து கேட்பது வழக்கம். ஆனால் 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு கருத்து கேட்கவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை அரசாணை இல்லாமல் மூட முடியாது. பாமர மக்களை திசை திருப்ப எதிர்க்கட்சிகள், அரசு கொள்கை முடிவு எடுக்கவில்லை என்று கூறி வருகின்றன. தூத்துக்குடி மக்களின் எண்ணம், தமிழக மக்களின் முடிவு. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருக்கிறது. அதில் இருந்து அரசு பின்வாங்காது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அவர் ஆட்சிக்கு வந்தால் சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வராது. இவர்கள் ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர்களை காட்டிலும் அதிக அக்கறை எங்களுக்கு உண்டு. யார் தவறு செய்தாலும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவர் சசிகலா, டி.டி.வி. தினகரன் குடும்பத்தை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார்.

தினகரனும், மு.க.ஸ்டாலினும் நண்பர்கள். தற்போது ஒருவருக்கொருவர் உண்மை பேசி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author