திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் காயம்: மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் பூஜையில் கலந்து கொண்ட சசிதரூருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டன.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் போட்டியிடுகிறார். தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் சசிதரூர், திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. எடைக்கு எடை காணிக்கை வழங்கும் துலாபாரம் சடங்கில் கலந்து கொண்ட போது சசிதரூருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

காயம் அடைந்த சசிதரூர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு ஆறு தையல்கள் போடப்பட்டது. ஆபத்தான காயம் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து திருவனந்தபுரம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சசிதரூர், பாரதீய ஜனதாவின் கும்மனம் ராஜசேகரனையும் சி.பி.ஐ.(எம்) தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் சி திவாகரனையும் எதிர்த்து போட்டியிடுகிறார். கேரளாவில் இன்று விஷு வருடபிறப்பு கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

You might also like More from author