தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறுகிறார் வெய்ன் பார்னெல்: நீண்டகாலமாக தேர்வுக்குழுவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை

தென் ஆப்பிரிக்காவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல் இங்கிலாந்தின் கோல்பாக் ஒப்பந்தத்தின்படி வொர்ஸ்டர்ஷயர் அணிக்கு ஆடவிருக்கிறார். அதாவது சர்வதேச கிரிக்கெட் வாழ்வும் தென் ஆப்பிரிக்க அணி வாய்ப்பும் அவரைப் பொறுத்தவரை முடிவுக்கு வந்தது என்றே கூற வேண்டும்.

29 வயதாகும் வெய்ன் பார்னெல் கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்காக அக்டோபர் 2017-ல் ஆடினார். அது வங்கதேசத்துக்கு எதிரான போட்டி, அதன் பிறகு வீரர்கள் ஒப்பந்தம் இவருக்கு வழங்கப்படவில்லை.
நீண்டகாலமாக அணித்தேர்வுக்குழுவிடமிருந்து ஒரு தகவலும் இல்லை, அதனால்தான் வொர்ஸ்டர் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டேன் என்றும் ஆனால் தென் ஆப்பிரிக்காவை விட்டுச் செல்வது கடினமான முடிவுதான் என்றார் வெய்ன் பார்னெல்.

தென் ஆப்பிரிக்காவின் பல வீரர்கள் சமீபத்தில் இது போன்று கோல்பாக் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து சென்று விட்டனர், குறிப்பாக கைல் அபாட், மோர்னி மோர்கெல், ரைலி ரூசோவ் ஆகியோ ஏற்கெனவே இங்கிலாந்து குடிபெயர்ந்து விட்டனர்.

ஐசிசி-யின் வருவாய் பெரும்பங்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடையே பகிரப்படுவதால் தென் ஆப்பிரிக்கா வாரியத்துக்கு வருமானம் அவ்வளவாக இல்லை, இதனால் வீரர்களுக்கு பெரிய அளவு சம்பளமெல்லாம் அங்கு கிடையாது, அதனால் அனைவரும் உலக டி20 லீகுகள், இங்கிலாந்து கவுண்ட்டி என்று தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

கொஞ்சம் காயங்களினால் அவதி, கொஞ்சம் தென் ஆப்பிரிக்க அணித்தேர்வுக்குழு கொள்கைகள் என்று இவரது கரியர் தன் நாட்டுக்கு அல்லாமல் முடிவுக்கு வந்தது.

கடந்த ஓராண்டாகவே அவர் இங்கிலாந்து செல்ல முடிவெடுத்திருந்தார், காரணம் அனைத்து வடிவங்களிலும் இவரை அணியில் தேர்வு செய்யவில்லை.

“கடந்த ஜனவரியில் ஒரு பெரிய காயமடைந்தேன், அது என் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைக்கும் காயமானது 3-4 மாதங்கள் ஆடவில்லை. இது என் வாழ்நாளில் மிகவும் கடினமான காலக்கட்டம். என் மனைவியும் அப்போது கர்ப்பமாக இருந்தாள், அப்போது இப்படிப்பட்ட காயம் என்னை மனத்தளவிலும், உணர்ச்சிமட்டத்திலும் மிஅக்வும் பாதிப்படையச் செய்தது” என்றார்.

வெய்ன் பார்னெல் 6 டெஸ்ட், 65 ஒருநாள், 40 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 6 டெஸ்ட் போட்டிகள் ஆடவே 7 ஆண்டுகள் ஆடியுள்ளார்.

“லட்சியங்களும், ஆசைகளும் வாழ்க்கையில் எப்போதும் மாறிக் கொண்டேதான் இருக்கும். தென் ஆப்பிரிக்க அணியும் என்னைக் கடந்து சென்று விட்டது. காயமடைந்தது முதல் அணியிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. இந்தியாவுக்கு ஏ-தொடருக்குச் செல்லவில்லை. ஆனால் எதுவும் வருத்தமில்லை. வொர்ஸ்டர்ஷயர் அணி சிறந்த அணி, அங்கு நான் என் கிரிக்கெட்டையும் வாழ்க்கையையும் இதுவரை வசதியாகவே வாழ்ந்துள்ளேன்” என்றார் வெய்ன் பார்னெல்

You might also like More from author