பள்ளிகளுக்கு விடுமுறை; மீறும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கும், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலான இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், வரும் 7 -ம் தேதி தமிழகத்திற்கு மிக அதிக கனமழைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருவாய் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சென்னை முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதேபோன்று, தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோன்று, புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விடுமுறை அளிக்காத பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரித்துள்ளார். மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like More from author