தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடனும் தொகுதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்தன. இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் இதற்கான ஒப்பந்ததத்தில் நேற்று காலை கையெழுத்திட்டனர்.

அப்போது, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, அமைப்பு பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, மாவட்ட செயலாளர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஆர்.தேவராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த ஒப்பந்தம் முடிந்து வெளியில் வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. தி.மு.க.-கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையிலான உடன்பாடு 2 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது. அதன்படி, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்று ஒப்பந்தமாகி உள்ளது. தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பணியாற்றுவோம். கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு பாடுபடுவோம். 21 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

You might also like More from author