நிசான் கார் நிறுவன தலைவர் நிதி முறைகேடு வழக்கில் கைது

நிசான் கார் தயாரிப்பு நிறுவன தலைவராக இருப்பவர் கார்லோஸ் கோசன் (வயது 64).  பிரேசில் நாட்டில் பிறந்தவரான கார்லோஸ் லே காஸ்ட் கில்லர் என்ற பிரபல பெயரால் அறியப்படுபவர்.  ரினால்ட், நிசான் மற்றும் மிட்சுபிஷி ஆகிய கார் தயாரிப்பு நிறுவன கூட்டணிக்கான முக்கிய நபராக கார்லோஸ் இருந்து வருகிறார்.
இவர் நிதி முறைகேடுகளில் ஈடுபடுகிறார் என கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து பல மாதங்களாக கார்லோசிடம் அந்நிறுவனம் விசாரணை நடத்தியுள்ளது.
இதில் அவர் பல வருடங்களாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.  தனது வருவாயை இவர் குறைத்து அறிக்கை தாக்கல் செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.  நிறுவனத்தின் சொத்துகளை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய தகவலும் வெளிவந்துள்ளது.  இவருடன் இணைந்து நிறுவனத்தின் பிரதிநிதி இயக்குநரான கிரேக் கெல்லியும் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து நிறுவன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.  அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது பற்றி ஜப்பானிய வழக்கறிஞர்களிடம் நிசான் நிறுவனம் போதிய தகவல் அளித்துள்ளது.  இதனை தொடர்ந்து முறைப்படி கார்லோஸ் மற்றும் கெல்லி ஆகியோரை பதவியில் இருந்து நீக்க, வாரிய இயக்குநர்களிடம் தெரிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

You might also like More from author