நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மீண்டும் கவுன்சலிங்கா? முதல்வர் ஆலோசனை

சென்னை: நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில் குளறுபடிகள் ஏற்பட்டதால், தமிழில் தேர்வு எழுதிய 24000 மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியது. மேலும், சிபிஎஸ்இ புதிய நீட் தேர்வு தரவரிசைப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் அதன்படி கலந்தாய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பினால், மருத்துவப் படிப்ப்பு தரவரிசைப் பட்டியலிலும் கலந்தாய்விலும் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கலந்தாய்விலும் மாற்றம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று முன் தினம் சென்னையைச் சேர்ந்த சத்யா என்ற மாணவர் நீட் தேர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதிய தனக்கு முதல்கட்ட கலந்தாய்வில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அந்த இடம் நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். நீதிமன்ற தீர்ப்பினால், கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், சென்னையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மற்றும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், நீதிமன்ற தீர்ப்பின்படி புதிய தரவரிசைப் பட்டியலின்படி மாணவர்கள் யாரும் பாதிக்காத அளவில் எப்படி கலந்தாய்வை நடத்துவது மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author