பணமதிப்பிழப்பு பற்றி ஒரு குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட சொல்லியிருக்கும்: ராகுல் பேச்சு

சேலம்: பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதுபற்றி ஒரு குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட சொல்லியிருக்குமே என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற்ற திமுக – காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, கருணாநிதி என்பவர் சாதாரண மனிதரல்ல. தமிழர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தவர் கருணாநிதி. ஆனால் அவரது நல்லடக்கத்துக்கு இடம் தராமல் தமிழக அரசு கருணாநிதியை அவமானப்படுத்தியது. இதன் மூலம் தமிழர்களையே அவமானப்படுத்தியதாகவே கருதுகிறேன்.

தமிழகத்தில் நீட் தேர்வால் அனிதா என்ற பெண் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தமிழகத்தில் இன்னொரு அனிதா உருவாக விடமாட்டோம். நீட் தேர்வு தேவையா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும், மாநில அரசு வேண்டாம் என்றால் நீட் தேவை ரத்து செய்வோம்.
மக்களின் குரலைக் கேட்கிறோம், கருத்துப் பரிமாற்றத்தை ஏற்கிறோம். ஆனால் மோடி அரசோ எதிர் தரப்பின் குரலை ஒடுக்கவே விரும்பும்.

உதாரணமாக, ஒரு நாள் இரவு 8 மணிக்கு நாட்டின் பொருளாதாரத்தையே அழிக்க வேண்டும் என்று முடிவெடுத்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி அவர் யாரிடமாவது கருத்துக் கேட்டாரா? 12 வயது குழந்தையிடம் கேட்டிருந்தாலும் அதற்கு பதில் கிடைத்திருக்கும். இது அழிவுக்கு வழி வகுக்கும் என்று அந்த குழந்தை பதில் சொல்லியிருக்கும்.

கோடிக்கணக்கான பணத்தை அதானிக்கும், அம்பானிக்கும் கொடுப்பதையே விரும்புகிறார் மோடி. அதேப் பணத்தை நாங்கள் ஏழைக் குடும்பங்களுக்குக் கொடுப்போம் என்கிறோம்.

நியாய் என்ற திட்டத்தை உருவாக்கி அறிவித்துள்ளோம். இதன் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் உதவித் தொகையாகக் கிடைக்கும்.

வறுமைக்கு எதிராக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துவோம் என்றும் ராகுல் கூறினார்.

You might also like More from author