பந்துவீச்சில் ‘துல்லியத் தாக்குதல்’; பேட்டிங்கில் ரோஹித், தவண் ராஜநடை: இந்தியா மிகப்பெரிய வெற்றி

துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2018-ன் சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தானை துல்லியத் தாக்குதல் பந்து வீச்சினால் 237 ரன்களுக்கு மட்டுப்படுத்திய இந்திய அணி பிறகு ரோஹித், தவண் அனாயாச சதங்களினால் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ரோஹித் சர்மா 119 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 அதிரடி சிக்சர்களுடன் 111 ரன்களையும் ஷிகர் தவண் 16 பவுண்டரிக்ள் 2 சிக்சர்களுடன் 100 பந்துகளில் 114 ரன்களையும் எடுத்து 210 ரன்கள் கூட்டணி அமைக்க 39.3 ஒவர்களில் பாகிஸ்தானை நொறுக்கியது இந்திய அணி.

ஆசியக் கோப்பையை இந்தியா-பாகிஸ்தான் போட்டியை வைத்து வர்த்தகம் செய்தனர், ஆனால் அந்த வர்த்தக உயர்வு நவிற்சிக்கு எந்தவிதத்திலும் பாகிஸ்தான் அணி தயாராக இல்லை. மீண்டும் ஒரு பேட்டிங் சொதப்பல், மீண்டும் ஒரு இலக்கற்றப் பந்து வீச்சு. மீண்டும் இந்திய அணிக்கு ஒரு கேக்வாக் வெற்றி.

பிட்ச் அறிக்கையில் சுனில் கவாஸ்கர் கூறும்போது, “இந்தப் பிட்ச் முற்றிலும் பவுலர்களுக்கு சுடுகாடுதான். பவுலர்கள் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் விச கவனம் செலுத்துவது நல்லது.

பிட்சில் பிளவுகள் இருப்பதால் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம், மிகக்கொஞ்சம் சாதகமளிக்கலாம், ஆனால் நன்றாக பேட் செய்யும் பேட்ஸ்மென்களை ஒன்றும் செய்யாது” என்றார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது, “இன்று 250 ரன்களுக்கு மேல் அடிக்க விரும்புகிறோம்” என்றார்.

ரோஹித் சர்மா கூறும்போது, “எதிரணியினரை இதுவரை மட்டுப்படுத்தியுள்ளோம் இந்தப் போட்டியிலும் மட்டுப்படுத்துவோம் என்றே நினைக்கிறேன். நன்றாக பவுலிங் செய்து என்ன இலக்காக இருந்தாலும் நல்ல தொடக்கத்துடன் விரட்ட வேண்டும், விரட்டுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேற்கூறியவற்றில் அனைத்தையும் ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா சிறப்பாகச் செய்ய, மட்டைப் பிட்சில் பாகிஸ்தான் 250 ரன்களை எடுக்க முடியாமல் 237 ரன்களுக்கு மட்டுப்பட்டது.

பந்துவீச்சில் துல்லியத் தாக்குதல்: சாஹல் கொடுத்த ஓபனிங்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமார் மிகத் துல்லியமாக வீசி பகார் ஜமானையும், இமாம் உல் ஹக்கையும் திணற அடித்தனர். கவாஸ்கர் கூறியது போல் இந்த பேட்டிங் சாதக பிட்சில் கட்டுக்கோப்பான பந்து வீச்சே கட்டுப்படுத்தும். அதனை திறம்படச் செய்தனர்.

பும்ரா 6 ஓவர்களில் 1 மெய்டனுடன் 13 ரன்களை மட்டும் கொடுக்க, புவனேஷ்வர் 4 ஓவர்களில் 8 ரன்களே கொடுத்தார் இருவரும் 8 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்தனர்.

சாஹல் பவர் பிளேவுக்குள் 8வது ஓவரே கொண்டு வரப்பட்டார். ரோஹித் சர்மாவின் இந்த கேப்டன்சி சாதுரியமானது, பயனளித்தது. இமாம் உல் ஹக் 10 ரன்களில் சாஹல் வீசிய பந்தை பிளிக் ஆட முயன்று தோற்றார் கால்காப்பில் பட எல்.பி.ஆனார். 10 ரன்களில் வெளியேறினார். ஒருநாள் போட்டிகளில் முதன் முதலாக பவர் பிளேவுக்குள் சாஹல் விக்கெட் எடுத்தார்.

பகார் ஜமான் 36 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை, பந்து வீச்சு அவ்வளவு துல்லியமாக அமைந்தது. கடைசியில் வெறுப்பாகி குல்தீப் யாதவ்வை ஸ்லாக் ஸ்வீப் ஆடி மிட்விக்கெட் மேல் மிகப்பெரிய சிக்சரை அடித்தார். பிறகு 15வது ஓவரில் இன்னொரு ஸ்லாக் ஸ்வீப் நான்கு ரன்களை எடுத்த ஜமான் குல்தீப் யாதவ் ஒரு பந்தை தூக்கி வீசி ஆசைக் காட்ட ஆட முயன்று பேலன்ஸ் தவறினார்.

பந்து கிளவ்வில் பட்டது தெரியாமல் எல்.பி.தீர்ப்பளித்தார் நடுவர் டக்கர். ரிவியூ செய்திருந்தால் தப்பித்திருக்கலாம் ஏனோ ரிவியூ செய்யாமல் சென்றார். 31 ரன்களில் அவர் வெளியேறினார். பாவம் நாட் அவுட்.

அடுத்ததாக பாகிஸ்தானின் பார்மில் உள்ள பாபர் ஆஸம் 9 ரன்களில் கேப்டன் சர்பராஸ் பாயிண்டில் தட்டி விட்டு பாபர் ஆஸமை சிங்கிளுக்கு இழுத்து விட்டு பிறகு திரும்பிப் போகச் சொன்னார், ஆனால் சாஹல் ஜடேஜாவுக்கு த்ரோவை செய்ய ரன் அவுட் ஆனார் பாபர் ஆஸம். 15.5 ஓவர்களில் 58/3.

ஷோயப் மாலிக், சர்பராஸ் நல்ல கூட்டணி:

58/3 என்ற நிலையிலிருந்து ஷோயப் மாலிக், சர்பராஸ் அகமட் ஒன்று சேர்ந்து 23 ஓவர்களில் 107 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

இது ஷோயப் மாலிக் வழக்கமாக ஆடிய ஒரு இன்னிங்ஸ். ரன்களை மெதுவே சேர்ப்பது சமயம் பார்த்து ஷாட்களை ஆடுவது என்று அரைசதம் கண்டார். ஆனால் பும்ரா இவரைப் படுத்தி எடுத்தார். பும்ரா பந்து வீச்சு இவருக்குப் புரியவில்லை என்பது தெரிந்தது. ஆனால் ஸ்பின்னர்களை ஆடும்போது கிரீஸை பிரமாதமாகப் பயன்படுத்தினார் ஷோயப் மாலிக். முன்னும் பின்னும் சென்று கட், புல், ஸ்வீப் என்று அசத்தினார்.

சர்பராஸ் அகமதும் 2 பவுண்டரிகளுடன் 66 பந்துகளில் 44 என்று 40 ஓவர்கள் நெருங்கும் சமயத்தில் கிரீசில் இருந்து பிற்பாடு அடித்திருக்கலாம் ஆனால் அவர் அவசரப்பட்டு குல்தீப் யாதவ்வை கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட்டைத் தூக்கி எறிந்தார்.

ஆசிப் அலி இறக்கி புவனேஷ்வர் குமாருக்கு காட்டு காட்டென்று காட்டினார், 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடிக்க புவனேஷ்வர் குமார் சமீபத்தில் கண்டிராத 22 ரன்களை ஒரு ஓவரில் கொடுத்தார். 21 பந்துகளில் 30 ரன்கள், ஆனால் சாஹல் தன் திறமையைக் காட்டினார். கூக்ளி வீசினார் அவர் ஸ்லாக் செய்தார் மிடில் ஸ்டம்ப் காலியானது.

90 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 78 ரன்கள் எடுத்த ஷோயப் மாலிக், பும்ரா பந்தில் லெக் திசையில் தோனியிடம் கேட்ச் ஆனார். மிகவும் மெல்லிய எட்ஜ், தோனிக்குத் தெரியவில்லை, பும்ரா அப்பீல் செய்ய நடுவர் கையை உயர்த்தினார், மாலிக்கிற்கு எட்ஜ் என்று தெரிந்தது, அதனால் ரிவியூ செய்யவில்லை.

இறுதி ஓவர்களை பும்ரா மிகத்துல்லியமாக வீசினார் ஒன்றுமே செய்ய முடியவில்லை. 4 ஓவர்களில் 15 ரன்கள் 2 விக்கெட். கடைசி 7 ஓவர்களில் பாகிஸ்தான் 38 ரன்களே வந்தது, பாகிஸ்தான் 237/7.

பாகிஸ்தான் பந்து வீச்சு ஒன்றுமில்லாமல் போனது:

238 ரன்கள் இலக்கு என்றவுடன் பாகிஸ்தான் கொஞ்சம் தெம்பாக இறங்கியிருக்கலாம், ஆனால் அவர்கள் உடல் மொழி அவ்வளவு பாசிட்டிவாக இல்லை.

ஷாஹீன் அஃப்ரீடி மட்டுமே ஏதோ கொஞ்சம் நன்றாக வீசினார், ரோஹித் சர்மாவுக்கு இவர் பந்தில் இமாம் உல் ஹக் ஒரு கேட்ச் விட்டார், பிறகு ரோஹித்திற்கு இன்னொரு கேட்சும் விடப்பட்டது.

ஆனாலும் இருவரும் ஒன்றும் கவலைப்படாமல் ஒன்றுமேயாகாத பாக் பந்து வீச்சை அனாயசமாகப் புரட்டி எடுத்தனர். ரோஹித் தன் 19வது சதத்தை எடுத்தார், ஷிகர் தவண் தன் 15வது ஒருநாள் சதத்தை எடுக்க பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய தொடக்கக் கூட்டணி அமைத்துச் சாதனை புரிந்தனர்.

இருவரும் இணைந்து 13வது சதக்கூட்டணி அமைத்தனர். தொடக்கத்தைப் பொறுத்தவரை இது 2வது சிறந்த தொடக்கக் கூட்டணி எண்ணிக்கையாகும்.

ஷிகர் தவண் பவுண்டரிகளாக விளாசினார். ஷாட் பிட்ச்களை புல், கட்ஷாட் ஆடினார். ரோஹித் சர்மா சிக்சர்களில் ஷாஹீன் அப்ரீடியை அடித்த புல் ஷாட் பிரமாதம் அதே போல் பின்னால் ஹசன் அலியை அடித்த பிக் அப் லெக் சைடு ஷாட் சிக்ஸ் அதைவிடவும் அனாயாசம். மொகமது ஆமீரை தவண் கவனித்தார் அவர் 5 ஓவர்களில் 41 என்று சொதப்பினார். லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் வந்தவுடன் ரோஹித் சர்மா டீப் மிட்விக்கெட்டில் 2 சிக்சர்களை விளாசினார்.

ஷிகர் தவண் அப்ரீடியை கவர் டிரைவ் பவுண்டரி மூலம் சதம் எடுத்துப் பிறகு அதைக் கொண்டாடும் விதமாக ஒரு பெரிய சிக்ஸ், இன்னொரு பவுண்டரி அடித்தார். 16 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 114 ரன்கள் எடுத்து தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். ரோஹித் சர்மா தன் 19வது சதத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை எடுத்தார். ஆட்ட நாயகன் ஷிகார் தவண்

You might also like More from author