பருவமழைக்கு தயாராகும் மாநகராட்சி: மரங்களை அகற்ற இயந்திரங்கள்!!

வடகிழக்கு பருவமழைக்குத் தயாராகும் விதமாக, மழை காலங்களில் சாலையில் விழும் மரங்களை அகற்றுவதற்காக ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் இயந்திரங்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கடந்த 2016-ம் ஆண்டு ஏற்பட்ட வார்தா புயல் ஆகிய இரு பேரிடர்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் எதிர்கொண்டது. 

அவற்றைச் சமாளிக்க அரசு சார்பில் ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. நிவாரணப் பணிகளின்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், போதிய உபகரணங்கள் இல்லாததால் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

கண்காணிப்புக் குழு

நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக அரசால் நியமிக்கப்பட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அனைத்து மண்டலங்களிலும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை ஒன்றை அளித்திருந்தது. அதில், நிவாரணப் பணிகளின்போது போதிய வெளிச்சம் தேவை என்பதால், மினி ஜெனரேட்டர்களையும், சாலையில் விழும் மரங்களை அகற்ற இயந்திரங்களையும் வாங்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

100 மினி ஜெனரேட்டர்கள்

இந்நிலையில் ஏற்கெனவே மாநகராட்சி சார்பில் ரூ.1 கோடி செலவில் பெட்ரோலால் இயக்கப்படும் 100 மினி ஜெனரேட்டர்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வார்டுக்கு ஒன்று வீதம் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் 200 மரம் அறுக்கும் இயந்திரங்களையும், 6 மரக்கிளைகளை வெட்டும் இயந்திரங்களையும் வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

You might also like More from author