பாகிஸ்தான் சிறைகளில் 537 இந்தியர்கள் :ஒப்பந்த அடிப்படையில் தகவல்

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2008-ம் ஆண்டு தூதரக அளவிலான ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி இருநாடுகளும் தங்கள் சிறைகளில் உள்ள கைதிகள் விவரத்தை ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என வருடத்துக்கு 2 முறை பரிமாறிக்கொள்ள வேண்டும்.
அதன்படி பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் விவரத்தை அந்நாட்டு வெளியுறவுத் துறை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரிடம் ஒப்படைத்தது. அதில் 54 பொதுமக்கள் மற்றும் 483 மீனவர்கள் என மொத்தம் 537 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல இந்திய வெளியுறவுத் துறையும் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இங்குள்ள சிறைகளில் உள்ள அந்நாட்டு கைதிகள் விவரத்தை அளித்தது. நீடித்த நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல 1988-ம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே செய்துகொண்ட ஒரு ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஜனவரி 1-ந்தேதி இருநாடுகளும் தங்கள் எல்லையில் உள்ள அணுசக்தி நிலையங்கள், வசதிகள் பற்றிய தகவலை பரிமாறிக்கொள்ள வேண்டும். அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை தவிர்ப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
1988-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானாலும், 1991-ம் ஆண்டு ஜனவரி 27-ந்தேதியில் இருந்து இது நடை முறைக்கு வந்தது. 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் ஒப்படைத்தது.
இந்திய வெளியுறவுத் துறையும் இங்குள்ள அணுசக்தி நிலையங்கள் பற்றிய தகவலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வழங்கியது.

You might also like More from author