பாகிஸ்தான் மக்கள் தொகை 19 ஆண்டுகளில் 57 சதவீதம் உயர்வு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1947-ம் ஆண்டு வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் 1951-ம் ஆண்டு அங்கு முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1961, 1971, 1981 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.

அதன்பிறகு, 19 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கண்டுள்ள விபரங்களின்படி, கடந்த 19 ஆண்டுகளில் அந்நாட்டின் மக்கள் தொகை 57 சதவீதம் உயர்ந்து 20.78 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 36 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 146.6 சதவீதம் அதிகரித்திருந்தாலும் பஞ்சாப், சிந்து ஆகிய இரு பெரிய மாகாணங்களில் மக்கள் தொகை பரவலாக குறைந்து காணப்படுகிறது. அதேவேளையில், பலுசிஸ்தான், கைபர் பகதுங்வா போன்ற சிறிய மாகாணங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் வாழும் ஆப்கானிஸ்தான் நாட்டினர் மற்றும் பிற வெளிநாட்டினருடன் சேர்ந்து அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 20 கோடியே 78 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்ட்டிஸ்தான் பகுதிகள் இந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1998-ம் ஆண்டு இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது கடந்த 19 ஆண்டுகளில் அந்நாட்டின் மக்கள் தொகையில் 7 கோடியே 54 லட்சம் அதிகரித்துள்ளது.

ஆண்களின் பிறப்பு சதவீதம் 51.2 சதவீதம் அதிகரித்து 10 கோடியே 66 லட்சமாகவும், பெண்களின் பிறப்பு விகிதம் சற்றே குறைந்து 48.8 சதவீதம் அளவிலும் எண்ணிக்கை 10 கோடியே 13 லட்சமாகவும் உள்ளது. 10 ஆயிரத்து 148 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.

You might also like More from author