பிரம்மஹத்தி தோஷம், மாந்தி தோஷம் தரும் யோகங்களும், பாதிப்புகளும்!!

நன்மை தரும் யோகங்களும் உண்டு, பாதிப்புகளைத் தரும் யோகம்களும் உண்டு. நாம் இப்போது பாதிப்புகளை உண்டுபண்ணும் சில யோகங்களைப் பார்ப்போம்.

பிரம்மஹத்தி தோஷம்:-

உங்களின் முன் ஜென்மத்திலோ, அல்லது உங்கள் முன்னோர்களோ அடுத்தவர் உயிர் பறித்த பாவம் பிரம்மஹத்தி தோஷமாக மாறி, நிம்மதி இல்லாத வாழ்வைத் தரும். எந்தச் செயலும் தடையாகவே இருக்கும். தாமதமாகவே நடக்கும்.

எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத மாதிரியான மனநிலை ஏற்படும். குடும்பத்தில் எந்த ஒருவருக்கும் நிம்மதி அற்ற சூழ்நிலையே காணப்படும். மகன் அல்லது மகள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சனை தொடர்ந்து இம்சை பண்ணிக்கொண்டே இருக்கும்.

புத்திரபாக்கியத்தில் தாமதம் அல்லது குறையுடைய குழந்தை பிறந்து ஒட்டுமொத்த வீட்டின் மனநிம்மதியையே குலைக்கும். இவையெல்லாம் பிரம்மஹத்தி தோஷத்தின் பாதிப்புகள்.

’அய்யோடா… கடவுளே… இதற்கு என்ன தீர்வு?’

“திருவிடைமருதூர்” செல்லுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் அசாதரணமான சூழ்நிலை தெரியாமலும் புரியாமலும் கலங்கித் தவிப்பவர்கள், “திருவிடைமருதூர்” சென்று வாருங்கள். உங்கள் முன் “ஜென்ம வினை”, உங்கள் முன்னோர்களால் உண்டான “வினை” அனைத்தும் தீரும், உங்கள். வாழ்வும் சுபிட்சமாகும். கும்பகோணம் அருகில் உள்ளது திருவிடைமருதூர். இங்கே இறைவனின் திருநாமம் ஸ்ரீமகாலிங்க சுவாமி.

அடுத்து நாம் பார்க்கப்போவது “மாந்தி” தோஷம்;

உங்கள் ஜாதகத்தில் “மாந்தி”யானவர் 3,6,10,11 ஆகிய இடங்களில் இருந்தால், இந்தப் பதிவு உங்களுக்கானதல்ல. காரணம்… மேற்கண்ட இடங்களில் மாந்தி அமர்ந்தால் தோஷமாக வேலை செய்யாது, மாறாக நன்மையையே தருவார் மாந்தி. காரணம் இது “ உபஜெயஸ்தானம்” ஆகும்.

இந்த உபஜெயஸ்தானத்தில் மாந்தி, சனி, செவ்வாய், ராகு, கேது, சூரியன் இருந்தால் நன்மையை மட்டுமே தருவார்கள்.

சரி யார் இந்த “மாந்தி” ? இவர் சாதாரணமானவர் அல்ல. சனீஸ்வர பகவானின் மகன்.

இவர் பிறந்ததே ஒருவரின் உயிரை எடுக்கத்தான் என்றால் ஆச்சரியம்தானே.

லங்கேஷ்வரன் ராவணன் ஏழு உலகையும் வென்று தேவர்கள் முதலானோரை தன் அடிமையாக வைத்திருந்தான். அவர்களில் நவக்கிரகங்களும் அடக்கம்.

தனக்கு ஒரு வாரிசு (இந்திரஜித்) போகிறது என தெரிந்தவுடன் இந்த நவகிரகங்களையும் எங்கெங்கு இருந்தால் மரணமே இருக்காதோ அந்த வரிசையில் நிற்க வைத்தான். குழந்தை பிறக்கும் நேரம்… இந்த சனிபகவான் மெலிந்த உடல்வாகு, கூன்முதுகு, சூம்பிப்போன கால்கள்.

இந்த பலவீனமான கால்களால் நிற்க முடியாமல் தான் நின்ற ராசி கட்டத்திற்கு அடுத்த கட்டத்தில் தடுமாறி கால் வைக்கப் போகிறார், இதைக் கண்ட ராவணன் தன் வாளால் சனிபகவானின் காலை வெட்டிவிடுகிறார். அந்தக் கால் சென்று விழுந்த இடம் 7 ஆம் இடம்.

ஆம் ! மரணத்தைக் காட்டும் இடமான 7ம் இடம்தான் அந்தக் கால் விழுந்தது. அதுதான் “மாந்தி” எனும் சனியின் பிள்ளை.

இந்த மாந்தியின் காரணமாகவே இந்திரஜித் மரணத்தை எதிர்கொண்டான்.

சரி ஜோதிடத்திற்கு வருவோம். 3,6,10,11 ஆகிய இடங்களில் தோஷத்தைத் தரமாட்டார்.

அப்படியானால் எங்கு கடுமையான தோஷத்தைத் தருவார்? எங்கு ஓரளவு தோஷத்தைத் தருவார்?

லக்னத்தில் அமர்ந்த மாந்தி கடுமையான தோஷத்தைத் தருவார். மற்றும் 2, 5, 7, 8, 9, ஆகிய இடங்களில் கடுமையான தோஷத்தைத் தருவார். அடுத்து 4, 12, ஆகிய இடங்களில் ஓரளவு தோஷத்தைத் தருவார்.

உங்கள் ஜாதகத்தில் மேற்கண்ட இடங்களில் மாந்தி இருந்தால் தோஷம் என்பதை உணரலாம்.

இதில் ஒரேஒரு விலக்கு உண்டு “சிம்மத்தில்” அமர்ந்த மாந்தி தோஷத்தைத் தருவதில்லை.

காரணம் இந்த மாந்தி சூரியனுக்குப் பேரன். எனவே தோஷத்தைத் தருவதில்லை.

மற்றபடி லக்னம், 2,5,7,8,9 ஆகிய இடங்களில் இருக்கும் மாந்தி தோஷத்தைத் தருவார்.

லக்னம்:- லக்னத்தில் இருந்தால் வளர்ச்சி தடைப்படும். எதையோ இழந்ததுபோல் இருப்பார்கள். பலவீனமான உடல்வாகு, தவறாக முடிவெடுத்தல், முன்ஜென்ம வினை அதிகம் கொண்டவராக இருப்பார்கள்.

ம் இடம்:- குடும்பத்தில் நிம்மதி என்பதே இருக்காது. வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் இருப்பர். பணம் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆரம்பக் கல்வி தடைப்படும். வாக்குறுதி தந்து வாக்கு தவறி பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.

5ம் இடம்:- புத்திரபாக்கியத்தில் தடை, அல்லது சமூகத்தில் குடும்ப நற்பெயரை கெடுக்கும் பிள்ளை, அல்லது பயனில்லாத குழந்தை என்று குடும்பத்தில் சந்தோஷமற்ற நிலை ஏற்படும்.

7ம் இடம்:- திருமணத்தடை, தன் எதிர்பார்ப்பை முற்றிலும் முறியடிக்கக்கூடிய ஏமாற்றம் தரும் துணை அமைதல், நோய் பாதிப்புள்ள துணை அமையும்.

8ம் இடம்:- அடிக்கடி விபத்துகள் நடக்கும். அதிக அறுவைசிகைச்சை ஏற்படும். மொத்தத்தில் “நித்ய கண்டம், பூரண ஆயுசு” என்பதாகவே அமையும்.

9ம் இடம்:- தந்தையால் பயன் இருக்காது. அல்லது தந்தையின் அரவணைப்பு இல்லாமல் போகும் (தந்தை இல்லாத நிலை) அல்லது கடும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடும். பூர்வீகச் சொத்து அழியும் அல்லது பயனில்லாமல் போகும்.

ம் இடம் : சொந்த வீடு இருந்தாலும் அனுபவிக்க முடியாது. வாகனம் அடிக்கடி பழுது ஏற்படும். அல்லது அடிக்கடி விபத்து ஏற்படுதல், பயணங்களில் எப்போதும் அசௌகரியம் உண்டாகுதல், ஏன் எதற்கு என்றே தெரியாமல் பணம் செலவாகுதல் எனும் நிலை ஏற்படும்.

12 ம் இடம்:- நிம்மதி அற்ற நிலை, இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தல், அடிக்கடி மருத்துவச் செலவு, ஊர்விட்டு ஊர் மாறிக்கொண்டே இருத்தல், அல்லது யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்தல் எனும் துர்பாக்கிய நிலை உண்டாகும். இப்படி பலவிதமான தோஷங்களைத் தரும்.

இதற்கு எப்படித் தீர்வு காணமுடியும் அல்லது பரிகாரம் என்ன?

ரத்னசபை என போற்றப்படும் திருவாலங்காட்டில் மாந்தி வழிபட்ட சிவலிங்கம் உண்டு. அந்த லிங்கத்தை வழிபட மாந்தி தோஷம் நீங்கும்.

திருநறையூர் தெரியுமா. கோயில் நகரம் கும்பகோணம் அருகில் நாச்சியார்கோவிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்கே, சனி பகவான் தன் குடும்பத்தோடு காட்சி தருகிறார். மனைவி நீலாதேவி, மகன்கள் மாந்தி, மற்றும் குளிகன் என காட்சி தரும் இவர்களை வணங்க மாந்தி தோஷம் நீங்கும்.

அதுமட்டுமா? பட்டுக்கோட்டை அருகே விளங்குளம் எனும் ஊர் உள்ளது. இங்கே உள்ள சிவாலயத்தில், சனிபகவான் தம்பதி சமேதராக, குடும்ப சகிதமாக அருட்காட்சி தருகிறார். இங்கே சென்றும் தரிசியுங்கள்.

அனைத்திற்கும் மேலாக இறந்தவர்கள் உடல் அடக்கத்திற்கு உங்களால் ஆன உதவி எதுவானலும் செய்யுங்கள். மாந்தி தோஷம் இல்லாமல் செய்துவிடும். குறிப்பாக அனாதை சவ அடக்கத்திற்கு செய்யும் உதவி உங்களின் தலைமுறைகளை கடந்து காபந்து செய்யும்.

You might also like More from author