புதுச்சேரி சட்டப்பேரவை வாயிலுக்கு பூட்டு: அனுமதி மறுப்பு; காத்திருந்து திரும்பிய பாஜக நியமன எம்எல்ஏக்கள்

புதுச்சேரியில் சட்டப்பேரவை வாயில் பூட்டப்பட்டு கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவரையும் சபை காவலர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். ஒரு மணி நேரம் காத்திருந்து விட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு நியமனம் செய்த பாஜகவைச் சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்களாக சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். பாஜகவினர் மூவரையும் ரகசியமாக ராஜ் நிவாஸ் கதவை மூடி ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சபாநாயகர் வைத்திலிங்கம் இதுவரை அவர்களை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை நாடினர். நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி உத்தரவிட்டது.

பேரவைக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும், தன்னிடம் கருத்து கேட்காமல் வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்க முடியாது என மார்ச் 25-ம் தேதி மறுத்து உத்தரவிட்டார்.

மார்ச் 26-ம் தேதி தொடங்கிய இடைக்கால நிதிநிலைக் கூட்டத்தொடரின்போது பேரவைக்குள் வர தடை விதித்து வைத்திலிங்கம் உத்தரவிட்டார். நியமன எம்எல்ஏக்கள் போராடியும் பேரவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான மறுசீராய்வு மனுவை சபாநாயகர் வைத்திலிங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இதுவரை நிலுவையில் உள்ளது. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து முதல்வரின் செயலரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான லட்சுமிநாராயணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நடவடிக்கை குறிப்பில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எவ்வித தடை ஆணையும் பிறப்பிக்கவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாக ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

யார் தடுத்தாலும் பேரவைக்குள் நுழைவோம் என்று நியமன எம்எல்ஏக்கள் அறிவித்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு அளித்த மனுவில் இடைக்கால தடையாணை ஏதும் நீதிபதிகள் தரவில்லை என்று குறிப்பிட்டார்.

தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், பேரவையை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் ஞாயிறு மாலை முதல் அதிகரிக்கப்பட்டன. திங்கள்கிழமை காலையில் சட்டப்பேரவை வெளியே எஸ்எஸ்பி ஆபூர்வாகுப்தா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பேரவைக்குள் நுழைவோம் என்று கூறி பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவரும் காரில் வந்தனர். முன்னதாகவே பேரவையின் வாயிலில் பூட்டு போடப்பட்டிருந்தது. பாஜகவினர் மீண்டும் அனுமதி தரப்படவில்லை. நுழைவாயிலில் காத்திருந்தனர்.

You might also like More from author