பெட்ரோல், டீசல் மீது வரி குறைப்பு சாத்தியமில்லை: அருண் ஜேட்லி

பெட்ரோல், டீசல் மீது வரி குறைப்புக்கு சாத்தியமில்லை என மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். இந்திய குடிமக்கள் அனைவரும் வரிகளை நேர்மையாக செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களது வரி நிலுவைகளை நேர்மையாக செலுத்த வேண்டும். இதன் மூலம் பெட்ரோல், டீசல் மூலமாக கிடைக்கும் வருவாயை எதிர்பார்ப்பது குறையும்.  மறைமுகமாக பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு சாத்தியமில்லை என்பதை ஜேட்லி சுட்டிக் காட்டியுள்ளார்.

சம்பளதாரர்கள் தங்களது வரி நிலுவைகளை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஜேட்லி, வரி தகுதியுடைய இதர பிரிவினர் தங்களது வரி கணக்குகளை மேம்படுத்த வேண்டும். வரி இணக்கமான சமுதாயம் கொண்ட இந்தியாவை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சர்வதேச அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது. 2017-18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. இந்த வளர்ச்சி மேலும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமல்படுத்தியது, திவால் மற்றும் நிதி மோசடி சட்டம் உள்ளிட்ட பல பொருளாதார சீர்திருத்தங்களால் இந்தியாவின் ஜிடிபியில் 2 சதவீதம் அளவுக்கு சரியும் என சிலர் கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால் இந்த கணிப்புகள் எல்லாம் பொய்யானது என்று ஃபேஸ்புக் பதிவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

பணமதிப்பு நீக்கத்தின் போது, ஜிடிபியில் 2 சதவீதம் வரை சரிவு இருக்கும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கணிப்பு வெளியிட்டிருந்தார். மேலும் பாஜகவை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மோடி அரசின் கொள்கைகள் இந்தியாவில் ஏழைகளை உருவாக்கி கொண்டிருக்கிறது என விமர்சனம் செய்திருந்தார்.

You might also like More from author