பேட்டிங் மோசம் தோனி நீக்கம், கோலிக்கு ஓய்வு?- ஒருநாள் தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புளிக்கத் திட்டம்

மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக தோனிக்கு பதிலாக ரிஷப் பந்த் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் சேர்க்க தேர்வுக்குழுவினர் பரிசீலிக்க உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஆஸ்திரேலியத் தொடருக்காக கேப்டன் விராட் கோலியை தயார்படுத்தும் வகையில் , ஒருநாள் தொடரிலும் அவருக்கு ஓய்வு கொடுக்க தேர்வுக்குழுவினர் ஆலோசிக்க உள்ளனர். விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார்.

ஹைதராபாத்தில் நாளை கூடும் அணியின் தேர்வுக்குழுவினர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்காக அணி தேர்வு செய்கிறார்களா அல்லது முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் முதலில் அணி வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளார்களா எனத் தெரியவில்லை.

ஆனால், தேர்வுக்குழுவினர் தோனியின் சமீபத்திய மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்து முக்கியமாக ஆலோசிக்க உள்ளனர். கீப்பிங் பணியை சிறப்பாகச் செய்துவரும் தோனி, அவ்வப்போது தனது அனுபவத்தின் மூலம் கேப்டனுக்கும் ஆலோசனைகளை வழங்குகிறார். அந்த அடிப்படையில் அணியில் தக்கவைக்கலாமா அல்லது ரிஷாப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்கலாமா என்பது ஆலோசிக்கப்படலாம். ஏனென்றால், கடந்த 18 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

அதுவும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தர்மசலாவில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோனி அரைசதம் அடித்தார். அதன்பின் இதுவரை குறிப்பிடும்படியாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை, பேட்டிங் முறையும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இழந்த பேட்டிங் பார்மை மீட்க உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி மீட்கலாம் என்று சுனில் கவாஸ்கர் கூட ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆதலால், தோனியை நீக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது.

அதேசமயம், கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவின் நீண்ட தொடருக்காக தயார் செய்யப்பட்டுவருகிறார். அவருக்கு போதுமான ஓய்வு அளிக்க அணிநிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆதலால், டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் ஓய்வு அளித்துவிடலாமா என்பது குறித்தும் தேர்வுக்குழுவினர் ஆலோசிக்க உள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிவரை தோனி விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேசமயம், ரிஷாப் பந்த் வளர்ச்சிக்கும் இடையூறு செய்யக்கூடாது. இப்போதுள்ளநிலையில், 6 அல்லது 7வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேனைக் கண்டுபிடிப்பது முக்கியமாக இருக்கிறது. அது சரியான பேட்ஸ்மேனாக அமைந்துவிட்டால், மேட்ச்வின்னராகவும் இருப்பார் எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடந்த ஓவல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த ரிஷாப் பந்த், ராஜ்கோட்டில் நடந்த மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 92 ரன்கள் குவித்து தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அதேசமயம் கேதார் ஜாதவ் நடுவரிசை பேட்டிங்கில் முக்கியமான வீரராக கருதப்பட்டாலும், பகுதிநேர பந்துவீச்சாளராக விளங்கினாலும், அடிக்கடி காயத்தால் அவதிப்படுகிறார். இவரின் உடல்நிலை குறித்தும் தேர்வுகுழுவினர் ஆலோசிப்பார்கள்.

ஆசியக் கோப்பைப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட அம்பதி ராயுடு அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார். கோலி விளையாடினாலும், ஓய்வு அளிக்கப்பட்டாலும் ராயுடு இடம் பெறுவது உறுதி.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட பும்ரா, புவனேஷ்வர் குமார் ஒருநாள் தொடரில் இடம் பெறுவார்கள் எனத் தெரிகிறது. அக்ஸர் படேல் காயத்தால் அவதிப்படுவதால், ரவிந்திர ஜடேஜாவும் தேர்வு செய்ய வாய்ப்பு உண்டு.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மோசமான ஆட்டத்தையும், பல்வேறு வாய்ப்புகளை வீணடித்து ரன் சேர்க்கத் திணறிவரும் மணீஷ் பாண்டே நீக்கப்பட்டு கருண் நாயர், மயங்க் அகர்வால் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

You might also like More from author