பொங்கல் சிறப்பு பஸ்கள் முன்பதிவு இன்று தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர் விடுமுறை காரணமாக பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்பவர்கள் 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலே செல்லத்தொடங்கி விடுவார்கள்.

அதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 11-ந்தேதி முதலே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் இயங்ககூடிய 2275 பஸ்களுடன் கூடுதலாக 5163 சிறப்பு பஸ்களையும் சேர்த்து 4 நாளில் மொத்தம் 14 ஆயிரத்து 263 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளன.

இந்த பஸ்கள் கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி நகராட்சி பஸ் நிலையம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக கே.கே. நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும்.

மற்ற ஊர்களில் இருந்து 4 நாட்களில் ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 445 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக 17-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை மொத்தமாக 3776 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் முக்கிய பகுதிகளில் இருந்து பல்வேறு மற்ற ஊர்களுக்கு திரும்புவதற்காக 7841 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு பஸ்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்காக மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயம்பேட்டில் 26 சிறப்பு முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 சிறப்பு முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையமும், மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முன்பதிவு மையங்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை திறந்து வைத்தார்.

You might also like More from author