பொதுத்துறை வங்கிகளைத் தொடர்ந்து கிராம வங்கிகளை இணைக்க திட்டம் 

பொதுத்துறை வங்கிகளை இணைப்பது போல, கிராம வங்கி களையும் இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி பல்வேறு மாநிலங்களில் உள்ள 56 கிராம வங்கிகளை இணைத்து 36 வங்கிகளாக்க முடிவு செய் துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி யமைச்சகத்தின் முக்கிய அதிகாரி கள் கூறுகையில்,

கிராம வங்கிகளை உரு வாக்கியதில் மத்திய, மாநில அரசு களுக்குப் பங்கு உள்ளது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளை இணைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான நட வடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், மாநிலங்களுக்குள் செயல்படும் கிராம வங்கிகளை யும் இணைப்பதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்றும் கூறினர்.

வங்கிகளை இணைப்பதன் மூலம் ஸ்திரமான ஒரே பெரிய வங்கி உருவாகும். இந்த வகையில் பேங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்றையும் இணைத்து ஒரே வங்கியாக உரு வாக்கப்போவதாக கடந்த மாதத் தில் மத்திய அரசு அறிவித்தது. இணைப்புக்கு பின்னர் இந்தியா வில் எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய வங்கியாக இது உருவாகும் என்றும் கூறியது.

தற்போது இந்தியாவில் பல் வேறு மாநிலங்களிலும் 56 கிராம வங்கிகள் செயல்பட்டு வருகின் றன. இவற்றை இணைத்து 36 வங்கிகளாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையினை அளிக்க முடியும். மேலும் இணைக்கப் படும் வங்கிகளின் நிதி நிலை ஸ்திரமாவதுடன், பலமான வங்கி யாகவும் இருக்கும். கிராமப்புறங் களில் டெபாசிட் திரட்டுவது, மற் றும் கடன் அளிப்பதிலும் சிறப் பான சேவை அளிக்க முடியும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

வங்கிகளை இணைப்பதன் மூலம் வங்கி செயல்பாட்டுக்கான செலவுகளை குறைக்க முடியும். தொழில்நுட்பங்களை மேம்படுத்த முடியும். மூலதன பலத்துடன் குறிப்பிட்ட பகுதிக்கான வங்கி யாகவும் செயல்படும் என்றும் குறிப்பிட்டனர்.

கிராம வங்கிகள் சட்டத்தின் படி, கிராமப்புற சிறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு கடன் மற்றும் நிதிச் சேவைகளை அளிக்கும் நோக்கத்தில் இந்த வங்கிகள் உருவாக்கப்பட்டன.

2015-ம் ஆண்டு சட்டத்திருத்தத்தின்படி, இந்த வங்கிகள் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இல்லாமல் வெளியில் நிதி மூலதனம் திரட்டிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிராம வங்கிகளின் 50 சதவீத கட்டுப்பாட்டினை மத்திய அரசு வைத்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் வசம் 35 சதவீத உரிமையும், மாநில அரசு வசம் 15 சதவீத உரிமையும் உள்ளன. கிராம வங்கிகள் இணைக்கப்படும் பட்சத்தில், சட்டத் திருத்தத்தின்படி மத்திய அரசு மற் றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகளிடம் உள்ள உரிமை 51 சதவீதத்துக்கும் கீழ் குறைக்கப் படும். எனினும் இந்த வங்கிகளின் உரிமை மற்றும் கட்டுப்பாடுகள் அரசின் வசமே இருக்கும்.

2005-ம் ஆண்டில் 196 கிராம வங்கிகளின் எண்ணிக்கை 2006-ம் ஆண்டுக்குள் 133 ஆக குறைக்கப் பட்டது. இது 105 ஆக மேலும் குறைக்கப்பட்டு 2015-ம் ஆண்டில் 82 ஆக சுருக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் இணைக்கப் பட்டு தற்போது 56 வங்கிகள் மட்டுமே உள்ளன.

கிராம வங்கிகள் தற்போது 21,200 வங்கிக் கிளைகளை வைத்துள்ளன. 2016-17 ஆண்டில் 17 சதவீத நிகர லாபமாக ரூ.2,950 கோடி ஈட்டியுள்ளன. மார்ச் 2017 நிலவரப்படி பல்வேறு திட்டங்களின் கீழ் இந்த வங்கிகளின் கடன் மற்றும் நிலுவைகள் 15 சதவீதம் உயர்ந்து ரூ.3.5 லட்சம் கோடியாக உள்ளது. -பிடிஐ

You might also like More from author