பொறியியல் நுழைவுத்தேர்வு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி,

சென்னையைச் சேர்ந்த ஏ.பாலசுப்பிரமணியன் என்பவர், நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. மெயின் நுழைவுத்தேர்வு மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.வெங்கட்ராமன் ஆஜராகி வாதாடினார்.

மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “இந்த ஆண்டு ஜே.இ.இ. மெயின் மற்றும் ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வுகளில் 25 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் இந்த மாணவர்களின் சேர்க்கை தீர்மானிக்கப்படும். இந்த தேர்வுகளில் பங்கேற்கும் மனுதாரர் மற்றும் மாணவர்களின் வசதிக்காக தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தை ஒரு வாரத்துக்கு திறந்து வைத்திருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You might also like More from author