மக்களுக்கு தோல்வி ; நீதிமன்றத்தின் மேல் சந்தேகம் வருகிறது : டிடிவி தினகரன்

புதுச்சேரி சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும், தமிழக சபாநாயகருக்கு ஒரு தீர்ப்பும் தலைமை நீதிபதி வழங்கியிருப்பது நீதிமன்றத்தின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என  டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.
இதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது. இந்த தீர்ப்பு அதிமுக தரப்பிற்கு நிம்மதியையும், தினகரன், திமுக தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த டிடிவி தினகரன் “பாண்டிச்சேரி சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, தமிழக சட்டசபை சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பளித்துள்ளார். ஒரு சாதரண குடிமகனாக நீதித்துறை மேல் சந்தேகம் வருகிறது. இந்த தீர்ப்பின் மூலம் இந்த மக்கள் விரோத அரசு இன்னும் 3 மாதம் நீடிக்கும் வாய்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இது மக்களுக்கான தோல்வியாகவே நான் பார்க்கிறேன்” என அவர் பேட்டியளித்தார்.

You might also like More from author