மனோகர் பாரிக்கர் பதவி விலக வலியுறுத்தி பேரணி

கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
ஏறக்குறைய 9 மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மனோகர் பாரிக்கர் அரசு நிர்வாகத்தை கவனிக்காமல் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக புதிய முதல் மந்திரியை நியமிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், மனோகர் பாரிக்கரின் இல்லத்தை நோக்கி நூற்றுக்கணக்கானோர் பேரணியாக நேற்று சென்றனர். மனோகர் பாரிக்கர் பதவி விலகவேண்டும், முழு நேர முதல் மந்திரியை பதவியில் அமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். மனோகர் பாரிக்கரின் இல்லத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்து இருந்த இந்த பேரணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சி பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
ஒன்பது மாதங்களாக மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்று வருவதால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. தனது சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை கூட மனோகர் பாரிக்கர் சந்திப்பது இல்லை. மனோகர் பாரிக்கரின் உடல் நிலை குறித்து அறியவும் நாங்கள் இங்கு வந்து இருக்கிறோம் என போராட்டத்தை ஒருங்கிணைத்த சமூக ஆர்வலர் ஏர்ஸ் ரோட்ரிகஸ் தெரிவித்தார். 48 மணி நேரத்தில் மனோகர் பாரிக்கர் பதவி விலகாவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

You might also like More from author