மல்லையாவை நாடு கடத்த அனுமதி
இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபரான மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு இங்கிலாந்து 14 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
மல்லையா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
டிசம்பர் 10, 2018 அன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போதே நான் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறினேன். உள்துறை செயலாளரின் தீர்மானத்திற்கு பிறகு மேல்முறையீடு முறையை நான் தொடங்க முடியவில்லை. இப்போது மேல் முறையீடு செய்வேன் என மல்லையா தனது டுவிட்டரில் கூறி உள்ளார்.
மேல்முறையீடு செய்ய மல்லையா விண்ணப்பித்த பிறகு, உச்சநீதிமன்ற நீதிபதியிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்படும். அந்த நீதிபதி தனது சம்மதத்தை தெரிவித்ததை அடுத்து, இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அவரது வேண்டுகோளை ஏற்பார்கள். இந்த நடவடிக்கைகளுக்கு குறைந்தது 18 மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.