மீண்டும் வெற்றிமாறனுடன் கைகோக்கும் தனுஷ்

நான்காவது முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ்.

2007-ம் ஆண்டு வெளியான ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக இருக்கும் இவர், ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ மற்றும் ‘வடசென்னை’ என 4 படங்களை மட்டுமே இதுவரை இயக்கியுள்ளார்.

அதிலும், ‘விசாரணை’ தவிர்த்த மற்ற மூன்று படங்களிலும் தனுஷ் தான் ஹீரோ. வருகிற 17-ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘வடசென்னை’ படம், மூன்று பாகங்களாக உருவாக இருக்கிறது. இதில், முதல் பாகம் மட்டும்தான் தற்போது ரிலீஸாக இருக்கிறது. அடுத்தடுத்த பாகங்கள் பின்னர் படம்பிடிக்கப்பட இருக்கின்றன.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தையும் தனுஷை ஹீரோவாக வைத்து எடுக்கப் போகிறார் வெற்றிமாறன். இந்தத் தகவலை, இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற ‘வடசென்னை’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷே தெரிவித்தார். அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் புதிய படம் முடிந்த பிறகுதான் ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்க இருக்கிறது. ஏற்கெனவே நடைபெற்ற படப்பிடிப்பில், 20 சதவீதக் காட்சிகள் இரண்டாம் பாகத்துக்காகத் தயாராக இருக்கின்றன என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.

You might also like More from author