முக்கிய திட்டங்களுக்கு மக்கள் கருத்து கேட்காமலேயே அனுமதி; தனியார் நிறுவன லாபத்துக்காக செயல்படும் தமிழக அரசு: தினகரன் கண்டனம்

தமிழ்நாட்டில் முக்கிய திட்டங்களுக்காக மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலேயே அனுமதி வழங்க வேண்டுமென தமிழக அரசு மத்திய அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் விரோத அரசு என்பதை ஒவ்வொரு நொடியும் நிரூபிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மற்றொரு பாதக செயல்தான், மக்களின் கருத்து கேட்காமலேயே ஹைட்ரோகார்பன் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சரிடம், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கொடுத்திருக்கும் கோரிக்கை மனு எடுத்துரைக்கிறது.

மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு தன் கடமையிலிருந்து தவறி, மக்களை தவிர்த்துவிட்டு இயங்க நினைக்கும் எண்ணம் கொண்டதாக தமிழகத்தில் அமைந்துள்ளமை மிகவும் துரதிருஷ்டவசமானது.

மக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களால், ஏற்படும் காலதாமதத்தால், முதலீட்டாளர்கள் நஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவது இந்த அரசு யாருக்காக இயங்கி கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. மக்களின் கருத்துக்கேட்பு என்பது முக்கிய திட்டங்களுக்கு அவசியமானது என்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006 எடுத்துரைக்கிறது. மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் வழிவகை செய்துள்ள போதிலும், அதை மறுக்கும் இந்த அரசின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமானது மட்டுமல்ல சட்டவிரோதமானதும் கூட.

பசுமையான விளைநிலங்களை எண்ணெய் வயல்களாக்கும் நோக்கில், ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தினை கொண்டு வந்து, விவசாய பெருங்குடி மக்களை ஓராண்டுக்கும் மேலாக போராட்ட மனநிலையிலேயே வைத்துக்கொண்டே, மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் தமிழகத்திற்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவரும் தமிழக அரசு, தற்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தினை விரிவுப்படுத்திடும் நோக்கத்தோடும், வேதாந்தா போன்ற தனியார் குழுமங்கள் தங்கு தடையின்றி தங்களது சொந்த லாபத்திற்காக தமிழகத்தில் வணிகம் செய்வதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு இக்கோரிக்கையினை முன்வைத்துள்ளது, மக்கள் விரோத பழனிசாமி அரசின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

விவசாயத்தை அழிப்பதற்கும், இயற்கை வளங்களை நாசமாக்கும் திட்டங்களுக்காகவும், மக்களின் நலனையும், மக்களின் குரலையும், நசுக்க நினைக்கும் பழனிசாமி அரசின் இப்போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, ஜனநாயகம் எல்லா நிலைகளிலும் காக்கப்பட, மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய அரசின் முன் வைத்த இந்த மக்கள் விரோத வஞ்சக கோரிக்கையை பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

You might also like More from author