முதல் நாள் வசூல், புதிய மைல்கல் விஜயின் சர்கார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
சர்கார் படம் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில்  வெளியாகி உள்ளது.  வெளியான அனைத்து தியேட்டர்களிலும் சிறப்பான வரவேற்பை பெற்று உள்ளது. தமிழ்நாட்டை  தவிர, தென்னிந்தியாவில் வெளியான பகுதிகளில்  குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு முன்பாகவே  டிக்கெட் விற்பனை தொடங்கி விட்டது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கார்த்திகா தியேட்டரில் நேற்று  அதிகாலை  முதல் 24 மணி நேரத்திற்கு ஒரு இடைவிடாத  படம் போடப்பட்டு  சாதனை புரிந்து உள்ளது. கேரளாவில் மட்டும் சர்கார் 400 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. தமிழ் நாட்டில் 650 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் 190 தியேட்டர்களிலும்  + 50 காட்சிகளும் திரையிடப்பட்டு உள்ளது. ஆந்திரா  மற்றும் தெலுங்கானாவில் மொத்தம் 350 தியேட்டர்களில் சர்கார் வெளியாகி உள்ளது.
முதல் காட்சி காலை 7 மணிக்கு மேல் தான் என்று அறிவித்தாலும், பல்வேறு திரையரங்குகளில் காலையிலேயே திரையிடப்பட்டன. முதல் நாள் ‘சர்கார்’ திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலுமே அனைத்து காட்சிகளுக்குமே டிக்கெட் விற்றுத் தீர்ந்தன. இதனால் முதல் நாள் வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
விநியோகஸ்தர்களே எதிர்பாராத விதமாக முதல் நாள் மொத்த வசூலில் சுமார் 30 கோடியை கடந்திருக்கிறது ‘சர்கார்’. இதற்கு முன்பாக எந்தவொரு தமிழ் படமுமே, முதல் நாளில் இவ்வளவு பெரிய வசூல் செய்ததில்லை என்பதால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது.
மேலும், சென்னையில் முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்து சாதனை புரிந்திருக்கிறது. முதல் நாள் வசூலில் 2 கோடியை கடந்த முதல் படம் ‘சர்கார்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக முதல் நாளில் ‘காலா’ வசூலித்த 1.76 கோடியே சாதனையாக கருதப்பட்டது.
மும்பையில் பல்வேறு திரையரங்குகளில் 12 காட்சிகள் வரை திரையிடப்பட்டதாக இந்தி திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் 152 இடங்களில் திரையிடப்பட்டு சுமார் 2.31 கோடி வசூல் செய்திருக்கிறது. பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் ‘கபாலி’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்திருக்கிறது ‘சர்கார்’.
தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என பல சாதனைகளை முறியடித்து வசூலில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்’.
அமெரிக்கா – இங்கிலாந்தில் சுமார் ரூ. 8 கோடி வசூல் செய்து உள்ளது.

You might also like More from author