‘மெரினா புரட்சி’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை

‘மெரினா புரட்சி’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.

சேரனிடம் உதவி இயக்குநராக இருந்து ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சண்முகராஜ். ஜல்லிகட்டுப் போராட்டத்தில் பெரிய மக்கள் எழுச்சி எப்படி உண்டானது என்ற கேள்வியை மையமாகக் கொண்டு மெரினா புரட்சி என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். நாச்சியார் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளையும் பேசும் ‘மெரினா புரட்சி’ திரைப்படத்தைப் பார்த்த மத்திய திரைப்பட தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்துக்கு தடை விதித்துள்ளனர்.

இது குறித்து இயக்குநர் சண்முகராஜிடம் கேட்டபோது, ”தடைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. வரும் வெள்ளிக்கிழமை அன்று ‘மெரினா புரட்சி’ திரைப்படம் மறு சீராய்வுக் குழுவினர் முன்பு திரையிடப்பட உள்ளது. அதில் படத்துக்கு நீதி கிடைக்கும். உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்” என்றார்.

‘மெரினா புரட்சி’ படத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வன்முறையை யார் நிகழ்த்தினார்கள் என்பதும், மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள், அரசியல் ரீதியான சர்ச்சைகள், சமூக விரோதிகள் குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை விதித்திருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

You might also like More from author