மேற்கு வங்க போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்று மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், கொல்கத்தா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்தது.
அதில் ஒரு மனுவில், “பலமுறை சம்மன் அனுப்பியும் கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார், சிட்பண்ட் மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களையும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை. எனவே அந்த ஆவணங்களை சி.பி.ஐ. வசம் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதேபோல் சி.பி.ஐ. தாக்கல் செய்த மற்றொரு மனுவில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றதாகவும், அவர்களை மேற்கு வங்காள போலீஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும், அரசியல்வாதிகளுடன் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை என்றும், எனவே அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
அந்த மனுக்களை  சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் மனு மீதான விசாரணை (செவ்வாய்க்கிழமை) இன்று நடைபெறும் என்று கூறினார்.
சாரதா நிதி மோசடி வழக்கில் மூத்த காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்துள்ளன என சிபிஐ  சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
போலீஷ் கமிஷனர் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க நாங்கள் உத்தரவிடுகிறோம். பின்னர் கோர்ட் அவமதிப்பு வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினர்.
போலீஸ் கமிஷனர் ராஜூவ் குமார்  சிபிஐ  விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க கோரியும், விசாரணைக்கு ஆஜராக கோரியும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.
போலீஷ் கமிஷனரை  கைது செய்யக்கூடாது, சிபிஐ போலீஸ் கமிஷனரை கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை பெறக்கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.
மேலும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை ஆஜராக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், அதுபோல் கோர்ட் அவமதிப்பு வழக்கில் மேற்கு வங்க தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.

You might also like More from author