யாருக்கு கோப்பை?- நடுவரிசை பேட்டிங் சிக்கலைச் சரிசெய்யுமா இந்தியா?-நாளை இங்கிலாந்துடன் இறுதி மோதல்

நடுவரிசை பேட்டிங் சிக்கலுடன் இருக்கும் இந்திய அணி லீட்ஸ் நகரில் நாளை நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வென்று தொடர்ந்து 10-வது தொடரைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை 9 முறை ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இந்திய அணி கைப்பற்றி வந்துள்ள நிலையில், நாளை போட்டியில் வென்று கோப்பையை வென்றால், அது 10-வது தொடராக அமையும்.

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரை இழக்காமல் இந்திய அணி விளையாடி வென்று வருகிறது. அந்தப் பெருமையை இந்தப் போட்டியில் இந்திய அணி தக்கவைக்க வேண்டும்.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி டி20 தொடரில் சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அடுத்து தொடங்கிய ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணி, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கோலி ஆட்டமிழக்க நடுவரிசை வீரர்களான ரெய்னா, ராகுல், தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிலைத்து ஆடாமல் விரைவாக ஆட்டமிழந்தது மிகப்பெரிய விமர்சனத்துக்குள்ளானது.

அதிலும் குறிப்பாக பினிஷிங் நாயகன் என்று அழைக்கக்கூடிய தோனி, 58 பந்துகளைச் சந்தித்து 37 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிரடியான ஆட்டத்துக்கும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்கும் திறமை கொண்ட தோனி நேற்று சொதப்பலாக பேட் செய்தது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது. இந்தக் குறைகள் எல்லாம் இந்தப் போட்டியில் களையப்பட வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி 86 ரன்களில் பெற்ற வெற்றியால் அந்த அணி தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. நாளை நடக்கும் ஹெடிங்லியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் இங்கிலாந்து அணிக்கு நெருக்கமாக வர முடியும்.

இந்திய அணியைப் பொறுத்தவரை கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, நியூசிலாந்து (இருமுறை), இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை (இருமுறை) ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்துக்கு எதிராகத் தோல்வி அடையாமல் இருந்து வருகிறது. இந்தப் பெருமையை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக இந்திய அணி விளையாடிய 17 ஒருநாள் போட்டிகளில் 10 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிராகக் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு நாள் தொடரில் 2-1என்று இந்திய அணி வென்றது. அதே பெருமையை இந்த முறையும் தக்கவைக்கும் என நம்பலாம்.

டி20 போட்டித் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பந்துவீச்சும், நடுவரிசை பேட்டிங்கும் திணறி வருகிறது.

குறிப்பாக வேகப்பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு எதிரணிக்கு நெருக்கடி தரும் விதத்தில் அமையவில்லை. கடந்த போட்டியில் கடைசி 8 ஓவர்களில் சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ் ஆகியோர் 3 பேரும் சேர்ந்து 82 ரன்களை வாரி வழங்கியுள்ளனர்.

பந்துகளை ஸ்விங் செய்யக்கூடிய புவனேஷ்வர் குமார் , ஜஸ்பிரித் பும்ரா இல்லாத குறை அணியில் தெரியத் தொடங்குகிறது. சுழற்பந்துவீச்சிலும் குல்தீப் யாதவ் மட்டுமே ரன்களைக் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். சாஹலின் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு அணிக்குக் கைகொடுக்கவில்லை.

கடந்த இலங்கை, தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் புவனேஷ்வர் குமார் உடல்நிலை காரணமாக சேர்க்கப்படவில்லை. இந்த முறையும் அவர் எப்போது குணமடைவார் என்பது குறித்த தகவல் இல்லை.

மேலும், கடந்த போட்டியில் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் எதிர்பார்த்த அளவுக்குப் பந்துவீசவில்லை என்பதால், இருவரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

புனேஷ்வர் குமார் அணியில் இருக்கும் பட்சத்தில் கடைசிநிலை வீரராக ஓரளவுக்கு பேட்டிங் செய்யும் திறமை படைத்தவர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 237 ரன்களை விரட்டிச் செல்கையில், 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது தோனியுடன், புவனேஷ்குமார் இணைந்து தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அணியை வெற்றி பெறவைத்தது நினைவிருக்கும்.

புவனேஷ்குமார் இருக்கும் பட்சத்தில் பேட்டிங்கில் கவலையில்லை. அவர் இல்லாத காரணத்தில் கடைசிநிலையில் பேட்டிங் செய்ய ஆல்ரவுண்டர் ஒருவரைத் தேர்வு செய்ய வாய்ப்பு உண்டு.

கடந்த ஒரு போட்டியில் தோனி சிறப்பாக விளையாடவில்லை என்பதற்காக தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்வார்களா என்பது சந்தேகமே. மிகப்பெரிய மேட்ச் வின்னரான தோனியை எளிதாக பெஞ்சில் அமரவைப்பது என்பது கடினமாகும். ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவரைக் கூடுதல் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் ஆட்டம் கண்டு வருவதால், அதைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு நடக்கும் உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக தங்களை சிறப்பாகத் தயார் செய்து வருகிறது. அதற்கு முன்னோட்டமாக சுழற்சி முறையில் பல வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகின்றனர்.

கடந்த சில போட்டிகளாக ஃபார்மில் இல்லாத ஜோட் ரூட் சதம் அடித்து இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பியுள்ளார். பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ, பட்லர், ஜேஸன் ராய், ஹேல்ஸ் ஆகியோர் வலுவான பார்மில் இருக்கிறார்கள்.

பந்துவீச்சில் இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில், குறிப்பிட்டு யாரையும் கூற இயலாது. பிளங்கெட், டேவிட் வில்லி, மொயின் அலி, ரஷித் ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையால்தான் பந்துகள் சிறப்பாக வந்ததேத் தவிர இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளிக்கும் பந்துவீச்சு இல்லை. அந்த வகையில் இங்கிலாந்து பந்துவீச்சை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்திய நேரப்படி போட்டி மாலை 5 மணிக்குத் தொடங்கும்.

இங்கிலாந்து அணி விவரம்:

எயின் மோர்கன்(கேப்டன்), ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயின் அலி, ஜோய் ரூட், ஜேக் பால், லியாம் பிளங்கெட், பென் ஸ்டோக்ஸ், ரஷித், டேவிட் வில்லி, மார்க் வுட், வின்ஸ்,

இந்திய அணி விவரம்

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், எம்எஸ்தோனி, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், ஸ்ரேயாஸ் அய்யர், சித்தார்த் கவுல், அக்சல் படேல், உமேஷ் யாதவ், சர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார்

You might also like More from author