ராகுல் டிராவிட் இந்த முறை வாக்களிக்க முடியாது – காரணம் இது தான்

பெங்களூரு:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலத்தில் இந்திரா நகர் எனும் பகுதியில் வசித்து வந்தார். அதன்பின்னர் இடம் மாறிய ராகுல், தற்போது சாந்தி நகர் பகுதியில் வசிக்கின்றார்

ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மாற்றம் செய்தால் அந்த இடத்தின் முகவரியை வாக்காளர், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஆனால் ராகுல் அவ்வாறு செய்யவில்லை.

இதையடுத்து தேர்தல் ஆணைத்தின் சார்பில் அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இது குறித்து விசாரிக்க 2 முறை நேரடியாக சென்றுள்ளனர். ஆனால் ராகுல் வெளிநாடு சென்றிருந்ததால் வீட்டில் நுழைய அனுமதி தரப்படவில்லை.அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

ராகுல் ஸ்பெயினில் இருந்தார். வாக்களிக்க வேண்டி கர்நாடகா வருவதற்கு ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

இது குறித்து சிறப்பு தேர்தல் தலைமை அதிகாரி ரமேஷ் கூறுகையில், ‘வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க கடந்த மார்ச் 16ம் தேதிக்குள் படிவம் 6 சமர்ப்பித்திருக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்காவிட்டால் எதுவும் செய்ய முடியாது. ராகுல் சமர்ப்பிக்க தவறிவிட்டார். எனவே அவரது பெயர் நீக்கப்பட்டது’ என கூறினார்.

கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக ராகுல் டிராவிட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author