ரூபாய் மதிப்பு சரிவு பெரிய விஷயம் இல்லை.. மோடி அரசு சரியான பாதையில் போகிறது.. விளக்கும் மனோஜ் லட்வா

மும்பை: ரூபாய் மதிப்பு சரிவடைவது உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது என்று, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியது சரிதான் என்கிறார், India Inc. நிறுவன நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் லட்வா. இதுபற்றி அவர் எழுதியுள்ள கட்டுரையை பாருங்கள்: இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான எதிர்கட்சிகளின் தலைவர்கள், குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசு பொருளாதார விவகாரங்களில் சரியாக செயல்படவில்லை என்பதை குற்றச்சாட்டாக சொல்லி அதற்கு ஆதாரமாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவு உண்மை உள்ளது? எதற்காக ஒரு ரூபாய் மதிப்பு சரிவடைகிறது. நர்சரியில் சொல்லித்தரும் Humpty Dumpty sat on the wall/Humpty Dumpty had a great fall… என்ற ரைம்ஸ்தான் இதற்கு சரியான பதிலாக இருக்க முடியும். அந்த பாடல் வரிகளுக்கு இணங்கதான் பொருளாதாரம் உள்ளது.

பிற நாடுகள் நிலைமை கடந்த ஐந்து ஆண்டுகளில் அர்ஜெண்டினாவின் பணமதிப்பு ‘பேசோ’ 546 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. துருக்கி நாட்டின் பண மதிப்பான லிரா 221 சதவீதம் சரிவடைந்துள்ளது. பிரேசில் நாட்டின் பண மதிப்பு 84% சரிவடைந்துள்ளது தென்னாப்பிரிக்காவின் பண மதிப்பு, ராண்ட், 51%, மெக்சிகோவின் பெசோ மதிப்பு, 47 சதவீதம் இந்தோனேசியாவின் ரூபியா 28%, மலேசியாவின் ரிங்கிட் 27% வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் அவற்றுடன் ஒப்பிட்டால், இந்திய ரூபாயின் மதிப்பு 16 சதவீதம் மட்டுமே வீழ்ச்சி அடைந்துள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் சீனாவின் யுவான் மட்டுமே இந்தியாவில் பண மதிப்பை விட சற்று மேம்பட்டுள்ளது. சீனாவின் பண மதிப்பு 12 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அவ்வளவு ஏன் அமெரிக்க டாலர் மதிப்பு கூட இக்காலகட்டத்தில் 18 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இந்தியாவின் பண மதிப்பு 16 சதவீதம்தான் வீழ்ச்சியடைந்துள்ளது.

காரணம் இதுதான் வளரும் பொருளாதார நாடுகளில், பண மதிப்பு வீழ்ச்சி அடைவதற்கு முக்கியமான காரணம் துருக்கி மற்றும் ரஷ்யாவின் பண மதிப்பு சரிவுதான். துருக்கி பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. அந்நிய நாட்டு கடன் அதிகரித்துள்ளது. வருடாந்திர பணவீக்க விகிதம் என்பது 18 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவுடன் ராஜாங்க உறவு நன்றாக இல்லை. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கி விட்டது. இந்த நாடுகளின் பண மதிப்பு வீழ்ச்சி அடைந்து அதன் காரணமாக சர்வதேச சந்தையில் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் வளரும் நாடுகளில் முதலீடு செய்வதற்கு அச்சப்பட்டு, அமெரிக்க டாலர் அல்லது மேற்கு ஐரோப்பிய நாடுகளை முதலீடுக்கான இடமாக தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நிலையிலும் இந்தியா பலமாகவே, தன்னை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மோடி அரசின் வெற்றி இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மிகப்பெரிய பிரச்சனை ஆகவில்லை. 16 சதவீதத்திற்கு உள்ளாக, அதை தடுத்து நிறுத்தியுள்ளது இந்திய அரசு. ஆனால் மற்ற நாடுகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பண மதிப்பு சரிவடைந்து உள்ளது. இதற்கு மாற்றாக இந்தியாவில் வெள்ளிக்கிழமை பணத்தின் மதிப்பு சற்று உயர்வை சந்தித்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பது இந்த அரசுக்கு கிடைத்துள்ள வெற்றி. 2014ம் ஆண்டு மோடி அரசு பதவிக்கு வந்ததில் இருந்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடன் இணைந்து கவர்ச்சிகர திட்டங்களை தவிர்த்து விட்டு உண்மையான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாக நிதி அமைச்சகம் பட்ட கஷ்டத்திற்கு இப்பொழுது பலன் கிடைத்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி, 8.2 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தனைக்கும் உலக வங்கி, சர்வதேச நிதியம், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை இந்திய ஜிடிபி என்பது 7.4 சதவீதம் என்ற அளவில் தான் இருக்கும் என்று கணித்து இருந்தன. இருப்பினும் அபார வளர்ச்சி பெற்றுள்ளது இந்திய பொருளாதாரம்.

கச்சா எண்ணையால் செலவு பணவீக்க விகிதமும் கூட பொருளாதார வளர்ச்சிக்கு நடுவேயும் பெரிதாக அதிகரித்துவிடவில்லை. ஜூலை மாதத்தில் 4.17 சதவீதம் என்ற அளவில் தான் பணவீக்கம் இருந்தது. அடுத்த காலாண்டில் பணவீக்க வீதம் என்பது 4.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது கட்டுப்பாட்டிலேயே உள்ளது என்பது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி. அடுத்தடுத்த மாதங்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபடியே இருந்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது 2.5 சதவீதம் அளவுக்கு உயரக்கூடும். இருந்தாலும் கூட இதுவே அனுமதிக்கப்பட கூடிய அளவு தான் என்பது கவனிக்கத்தக்கது. உலகிலேயே கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இதன்படி கச்சா எண்ணெய் விலையில் ஒரு டாலர் அதிகரித்தாலும் இந்தியாவின் இறக்குமதி பில் ஒரு பில்லியன் டாலர் அதிகரிக்கும். இந்த இடத்தில்தான் மரபுசாரா எரிசக்தி துறையின் வளர்ச்சி என்பது மிக அவசியம். ஹைட்ரோகார்பன் எரிசக்தி என்பது அதிகமாக மாசு ஏற்படுத்தக்கூடியது. ஆனால் மரபுசாரா எரிசக்தி மூலமாக மாசுபாடு குறைவதோடு, பல பில்லியன் டாலர்களை இந்தியா சேமிக்க முடியும். இந்த விஷயத்தில் மோடி அரசு ஆரம்பம் முதலே மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்ததை கவனித்திருப்பீர்கள்.

சிதம்பரமே சொல்லியுள்ளார் இதில் எனது கருத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. முன்னாள் மத்திய நிதியமைச்சரும் இப்போது எதிர்க்கட்சியில் மூத்த தலைவராகவும் உள்ள ப. சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூட, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைய அனுமதிக்கலாம், ஏன் தெரியுமா என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது ஏற்றுமதி அதிகரிக்கும். சமீப காலமாக அது வீழ்ச்சியடைந்துள்ளது. இது உள்நாட்டு தொழில்துறை உற்பத்திக்கு மிகவும் தேவையான ஊக்கமளிக்கும். இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இப்பொழுது அமைதியாக உள்ளன. 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்துவது குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டது. அதில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையாமல் தடுக்க வேண்டும் என்பது ஒரு அம்சம் கிடையாது, என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற ஒரு நாட்டில் எதிர்கட்சியை சேர்ந்த ஒரு மூத்த தலைவர் இவ்வாறு அரசுக்கு ஆதரவான ஒரு கருத்தை தெரிவித்து உள்ளது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஆனால் இந்தியாவிற்கு இது அவசியம் என்று நினைத்ததால் சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார். நானும் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் சிதம்பரம் கூறியதை முழு மனதோடு வழிமொழிகிறேன்.

You might also like More from author