விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டரை டெல்லி நிறுவனம் வாங்கியது; மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டது

வங்கிகளிடம் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு ஓடி விட்ட தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்களை டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இரண்டு ஹெலிகாப்டர்களை ரூ. 8.75 கோடிக்கு இந்நிறுவனம் வாங்கியுள்ளது. இவை இரண்டுமே விஜய் மல்லையா தனது சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்திய தாகும். இதில் 5 பேர் வரை பயணிக்கலாம்.

மின்னணு முறையில் (இ-ஏலம்) நடைபெற்ற ஏலத்தில் டெல்லியைச் சேர்ந்த சவுத்ரி ஏவியேஷன் பெசிலிடீஸ் லிமிடெட் நிறுவனம் பங்கேற்று இந்த ஹெலிகாப்டர்களை வாங்கியுள்ளது. இந்த இ-ஏலத்தை கடன் மீட்பு தீர்ப்பாயம் (டிஆர்டி) நடத்தியது.

ஒவ்வொன்றும் ரூ.4.37 கோடிமதிப்பில் இரண்டு ஹெலிகாப்டர் களை ஏலத்தில் எடுத்ததாக நிறுவனத்தின் இயக்குநர் சத்யேந்திர ஷெராவத் தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்த 17 வங்கிகளின் சார்பாக இந்த மின்-ஏலத்தை டிஆர்டி நடத்தியது. 2007-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரையான காலத்தில் வங்கிகளில் பெற்ற கடனைதிரும்ப செலுத்தாததால் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட்டு பணத்தை ஈடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே விஜய் மல்லை யாவின் கோவா வீடு ஏலம்விடப்பட்டது. ஆனால் அதை எவருமே ஏலம் கேட்க முன்வரவில்லை. இரண்டு முறை ஏலம் விடப்பட்டும் அது தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் ஒன்றான ஹெலிகாப்டரை ஏலம் விடும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி விடப்பட்ட ஏலத்தில் மூன்று நிறுவனங்கள் பங்கேற்றன. ஏலத்தில் பங்கேற்க குறைந்தபட்ச முன்வைப்புத் தொகை ரூ. 1.75 கோடியாகும்.

இந்த ஹெலிகாப்டர்கள் 10 ஆண்டு பழையவை. இதில் 5 பேர் பயணிக்க முடியும். இவை இரண்டும் நன்கு செயல்படும் நிலையில் உள்ளன. இரட்டை என்ஜினைக் கொண்டவை. தற்போது மும்பையில் ஜூஹு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை கடைசியாக 2013-ம் ஆண்டு பறந்தன. அதன்பிறகுஇவை செயல்படவில்லை. இந்த ஹெலிகாப்டர்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த உள்ளதாக ஷெராவத் தெரிவித்தார்.

சவுத்ரி ஏவியேஷன் நிறுவனம் வர்த்தக ரீதியில் சிறிய விமானம், ஹெலிகாப்டர் சேவைகளை உள்நாட்டில் அளிக்கிறது. டெல்லி விமான நிலையத்தில் கிரவுண்ட் கிளியரிங் சேவையையும் அளிக்கிறது. இ-ஏலம் பற்றிய விவரங் களை டிஆர்டி ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

You might also like More from author