விஜய் மல்லையா மீது லண்டன் ஐகோர்ட்டில் திவால் வழக்கு

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பிச்செலுத்தாமல் தொழில் அதிபர் விஜய் மல்லையா (வயது 62), இங்கிலாந்துக்கு தப்பி ஓட்டம் பிடித்தார்.

அவரை இங்கே நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் அவர் மீது இங்கிலாந்து கோர்ட்டில் 1.145 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.10 ஆயிரத்து 260 கோடி) திவால் வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையையும் சந்திக்க வேண்டிய நெருக்கடியில் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இதுபற்றி பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்புக்காக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள டி.எல்.டி.எல்.எல்.பி. சட்ட நிறுவனத்தின் பங்குதாரரான பால் கெயில் கூறும்போது, “இந்திய வங்கிகள் சார்பில் விஜய் மல்லையா மீது கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி திவால் வழக்கு தாக்கல் செய்து இருப்பதை உறுதி செய்கிறோம்” என குறிப்பிட்டார்.

இந்த வழக்கு லண்டன் ஐகோர்ட்டில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

You might also like More from author