18 வயதில் பிரித்வி ஷாவின் திறமையில் 10% கூட நாங்கள் கொண்டிருக்கவில்லை: விராட் கோலி ஒப்புதல்

பரிதாப மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி 2-0 என்று தொடரைக் கைப்பற்றியதன் மூலம் உள்நாட்டில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. நன்றி ஐசிசியின் இந்திய சாதக எதிர்கால பயணத்திட்டம் (FTP)

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, உட்கார வைத்து உட்கார வைத்து அணியில் எடுத்தாலும் 10 விக்கெட்டுகளை இந்தியாவில் கைப்பற்றிய 3வது பவுலர் உமேஷ் யாதவ்வை பாராட்டித்தானே ஆகவேண்டும், அதே போல் பிரித்வி ஷா-வின் அப்பழுக்கற்ற திறமையையும் பாராட்டித்தானே ஆகவேண்டும்.

விராட் கோலி கூறியதாவது:

ஷர்துல் தாக்கூர் காயத்தில் வெளியேறிய பிறகே இரு இன்னிங்ஸ்களிலும் உமேஷ் இப்படி வீசியது மிகப்பெரிய விஷயம். மணிக்கு 140 கிமீ வேகத்தில் அயராது வீசுகிறார் என்றால் அவரது உடல்தகுதியை கவனிக்க வேண்டும். அவரது கிரிக்கெட் வாழ்வில் இது தனித்து விளங்கும் ஒரு பந்து வீச்சாகும் இது, இதிலிருந்து அவர் மேலும் தன்னை கட்டமைத்துக் கொள்வார்.

நிறைய பவுலர்கள் நன்றாக வீசுவது நல்லதாக இருக்கிறது, ஒருவர் இல்லையெனில் ஒருவர் இது ஒரு அணியின் பார்வையிலிருந்து மிகப்பெரிய அனுகூலம். உமேஷ் யாதவ் ஒரு திறமை வாய்ந்த பவுலர் என்பதை பலரும் உணர்ந்ததில்லை. விளையாட முடியாத பந்துகளை அவர் அடிக்கடி வீசுகிறார், வலைப்பயிற்சியில் நாங்கள் இதனை தினசரி எதிர்கொண்டு வருகிறோம். அதாவது அவர் ஒரு பந்தை வீசுவார் அதில் நாம் அவுட் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் நன்றாக வீசுவதாக அவர் தன்னை புரிந்து வைத்துள்ளார்.

பிரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் நிறைய சுதந்திரமாக ஆடுகின்றனர். பிரித்வி ஷா தனிச்சிறப்பான ஒரு வீரர், வேறொரு தரநிலையில் உள்ளார். ரிஷப் பந்த் பயமற்று ஆடுகிறார். பிரித்வி, ரிஷப் இருவரும் பிரமாதமாக உள்ளனர். நிலைமைகள் எதிர்காலத்தில் அவர்களுக்குக் கடினமாக இருப்பது போல் இங்கு இல்லை, ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூழ்நிலைமைகளை மீறி தன்னம்பிக்கையுடன் ஆடுவது முக்கியம். டெஸ்ட் மட்டத்தில் நம்மால் ரன்கள் குவிக்க முடியும் என்பதே அந்தத் தன்னம்பிக்கை.

பிரித்வி ஷா போன்று நாம் விரும்பும் ஒரு தொடக்கத்தை கொடுக்கும் வீரரைத்தான் எதிர்பார்த்தோம். இந்தப் பார்வையிலிருந்து அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடும் பிரித்வி ஷா பிரமாதம். ஆனால் அவர் அலட்சியமாக ஆடுவதில்லை. தன் ஆட்டத்தின் மீது அவருக்கு ஏகப்பட்ட நம்பிக்கை உள்ளது. அவர் ஆடுவதைப் பார்த்தால் ஏதாவது ஒரு பந்தை இப்பவோ அப்பவோ எட்ஜ் செய்து விடுவார் என்று தோன்றும், ஆனால் அவர் எட்ஜ் செய்வதில்லை. இங்கிலாந்தில் வலைப்பயிற்சியிலேயே பார்த்தோம், அவர் தாக்குதல் ஆட்டக்காரர், ஆனால் கட்டுப்பாடு உள்ளவர். புதிய பந்தை எதிர்கொள்வதில் பிரித்வி ஷாவுக்கு ஒரு அரிய கட்டுப்பாடு உள்ளது. இது ஒரு மிகப்பெரிய திறன். ஏன், நாங்கள் 18.19 வயதில் ஆடும்போது கூட பிரித்வி ஷாவின் திறமையில் 10% கூட எங்களிடம் இருந்ததில்லை.’

அவர் இங்கிருந்து கட்டமைக்க வேண்டும், டெஸ்ட் கிரிக்கெட்டில் வந்து உடனடியாக அச்சமற்று ஆடி ஆதிக்கம் செலுத்தும் வீரர் கிடைத்திருக்கிறார் இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

You might also like More from author