பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்…

Introducing -battery-operated- scooter ...

பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ள பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர் ஏதெர் உலக சுற்றுச் சூழல் தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே உபயோகத்தில் உள்ள பேட்டரி வாகனங்களை விட மிக வேகமாகச் செல்லும் என்பதுதான் இதன் சிறப்பாகும்.

ஓராண்டு தாமதமாக இந்த ஸ்கூட்டர் வெளிவந்துள்ளதாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர். பெங்களூர் நகரம் முழுவதும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். இதற்கான இடங்களைக் கண்டறிவதற்காக வாகன அறிமுகம் ஓராண்டு தாமதமானதாக இணை நிறுவனர் தருண் மேத்தா தெரிவிக்கிறார். ஏதெர் 340 மற்றும் ஏதெர் 450 என்ற இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில் ஏதெர் 340 மாடல் விலை ரூ 1,09,750 ஆகவும், ஏதெர் 450 மாடல் விலை ரூ 1,24,750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரவாசிகளுக்கான முன்பதிவை மட்டும் இந்நிறுவனம் தொடங்கியுள்ளது. ஓராண்டு இலவச பராமரிப்பு சேவையையும் இந்நிறுவனம் அளிக்கிறது. சாலையில் செல்லும்போது வாகனம் நின்றுபோனால் உடனடி உதவி, கணக்கற்ற சார்ஜிங் வசதி உள்ளிட்டவை இதில் அடங்கும். அடுத்தகட்டமாக பிற நகரங்களுக்கான முன் பதிவை தொடங்கப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் புணே மற்றும் சென்னை நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்கூட்டரில் 42 காப்புரிமை, 122 வடிவமைப்பு, 55 புரோடோ டைப் ஆகியன மேற்கொள்ளப்பட்டு வர்த்தக ரீதியிலான உற்பத்தியை ஜூலை மாதம் தொடங்கப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ. தூரம் வரை செல்லும். ஏதெர் 340 மாடலில் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ. ஆகும். ஏதெர் 450 மாடல் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். இதில் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ ஆகும். இந்த ஸ்கூட்டரை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 சதவீத அளவுக்கு சார்ஜ் ஏறிவிடும்.

இரண்டு ஸ்கூட்டரிலும் முன்புற மற்றும் பின்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்கூட்டரிலுமே ஸ்மார்ட் இன்டராக்டிவ் டேஷ் போர்டு உள்ளது. 7 அங்குல தொடு திரை தேவையான தகவல்களை அளிக்கும். சாலை வழிகள், நெரிசல் பகுதிகள் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் இதில் அறிந்து கொள்ள முடியும்.

அத்துடன் இதில் உள்ள ஏதெர் செயலி (ஆப்) மூலம் பேட்டரியின் திறனை மற்றும் அருகில் உள்ள சார்ஜிங் மையத்தின் விவரத்தையும் தெரிந்து கொள்ள முடியும். பெங்களூர் நகரில் 30 இடங்களில் இந்நிறுவனம் சார்ஜிங் மையங்களை அமைத்துள்ளது. இதனால் 4 கிலோ மீட்டருக்குள் உள்ள ஒரு மையத்தை அறிந்து சார்ஜ் செய்து கொள்ள முடியும்

You might also like More from author