2-வது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, புஜாராவின் (106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் 82 ரன்கள், ரோகித் சர்மாவின் 63 ரன்கள் ஆகியவற்றின் உதவியால்  400 ரன்களை கடந்தது.  169.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை  ‘டிக்ளேர்’ செய்தது.
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. பும்ராவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல நிலைகுலைந்தன. 66.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 151 ரன்களில் ஆட்டமிழந்தது.  ஆஸ்திரேலிய அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் 25 ரன்களை கூட எட்டவில்லை. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதையடுத்து, 292 ரன்கள் முன்னிலையுடன் 2-து இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஹனுமா விஹாரி (13 ரன்கள்) புஜாரா (0), விராட் கோலி (0), ரகானே (1 ரன்), ரோகித் சர்மா ( 5 ரன்கள்) என அடுத்தடுத்து சில நிமிடங்கள் கூட களத்தில் நிற்காமல் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர். துவக்க வீரர் மயங்க் அகர்வால் மட்டும் தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டார். 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 27 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி 346 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.  மயங்க் அகர்வால் 28 ரன்களுடனும் ரிஷாப் பாண்ட் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

You might also like More from author