தேர்தல் வரும்போது மட்டும் மவுசு உயர்வு: தே.மு.தி.க.வுக்காக கூட்டணி கதவை திறந்து வைத்திருக்கும் அ.தி.மு.க., தி.மு.க.

சென்னை,

2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தே.மு.தி.க., கட்சி தொடங்கிய ஒரு ஆண்டிலேயே 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளை பெற்று அரசியல் களத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க., சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றிருந்தது. இதே கூட்டணியில் தான் பா.ம.க.வும் இருந்தது. இந்த கூட்டணியில் பாஜ.க., பா.ம.க. தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

அதன்பிறகு, 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தலைமையில் மக்கள் நல கூட்டணி என்னும் பெயரில் 3-வது அணி உருவாகியது. ஆனால், இந்தக் கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. என்றாலும், தே.மு.தி.க.வுக்கு என்று தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கி உள்ளது. 4 சதவீதம் அளவுக்கு வாக்குகள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதனால் தான் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், தே.மு.தி.க. தரப்பில் குறைந்தது 7 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று இரண்டு கட்சிகளிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், முதலில் 3 தொகுதிகள் வரையே தரமுடியும் என்று கூறிய இரு கட்சிகளும், தற்போது 5 வரை எண்ணிக்கையை உயர்த்தி இருப்பதாக தெரிகிறது.

ஆனாலும், தே.மு.தி.க. இன்னும் எதை எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை. இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடராமல் இருந்து வருகிறது. தே.மு.தி.க.வின் இதுபோன்ற நிலையில், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க முடியாமல் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கூட்டணி கதவை திறந்துவைத்தபடி காத்திருந்து வருகிறது.

தேர்தல் நேரங்களில் மட்டும் மவுசு அதிகரிக்கும் தே.மு.தி.க.வும் அ.தி.மு.க. பக்கம் செல்வதா?, தி.மு.க. பக்கம் செல்வதா? என்று முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வோ எப்படியும் தே.மு.தி.க.வை கூட்டணி வளையத்துக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

ஏனென்றால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க. இருந்தாலும், வட மாவட்டங்களில் மட்டும் தான் அந்தக் கட்சிக்கு வாக்கு வங்கி இருப்பதால், பரவலாக வாக்கு வங்கி வைத்திருக்கும் தே.மு.தி.க.வும் கூட்டணியில் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று பா.ஜ.க. கருதுகிறது. அதனால், பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ந்து தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறும் என்று நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர்.

You might also like More from author