ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்து-தமிழக அரசு தகவல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இறுதி தீர்ப்பு கூறப்படும் வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.இந்த  மனு மீதான விசாரணையின் போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கபட்டது.
தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரலாம் என  தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது;
ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. ஆனால் ஆலையை இயக்க அனுமதியில்லை என தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல் பூர்வ ஆதாரங்களை ஆகஸ்ட் 20க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது எனவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று  ஸ்டெர்லைட்டால் ஏற்படும் மாசு குறித்த அறிவியல்பூர்வ ஆதாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சமர்பித்தது
ஸ்டெர்லைட்  ஆலையில் கடந்த 16,17ம் தேதியில் நடத்திய ஆய்வறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்

You might also like More from author