நடிகர் சங்க தேர்தல் 6 மாதம் தள்ளிவைப்பு

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, நடிகை ஸ்ரீதேவி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

‘நடிகர் சங்க பொறுப்பில் 3 வருடங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளோம். உறுப்பினர்களுக்கு பல நலப்பணிகள் செய்துள்ளோம். வாக்குறுதி அளித்தபடி சங்க கட்டிடத்தையும் கட்டி வருகிறோம். உறுப்பினர்கள் பட்டியலில் உள்ள குறைகளை சரி செய்வதற்காக நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சங்கத்துக்கு கடிதம் கொடுத்துள்ளனர். எனவே தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளிவைத்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

அனைத்து உறுப்பினர்களுமே தேர்தலை தள்ளி வைக்க ஆதரவு தெரிவித்தனர். அடுத்த மார்ச் மாதம் கட்டிட வேலைகளை முடித்து திறப்பு விழா நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் சங்க தேர்தலும் புதிய கட்டிடத்திலேயே நடைபெறும். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க மேலும் ரூ.20 கோடி தேவைப்படுகிறது. எனவே நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். சர்வதேச தரத்தில் இந்த கட்டிடமும் அரங்குகளும் கட்டப்பட்டு வருகிறது இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

You might also like More from author