அண்ணா பல்கலைக்கழக ஊழல்:அதிகாரிகளுக்கு சம்மன்

அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு தேர்வுத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்ட போது பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பது அம்பலத்துக்கு வந்தது.

மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்த சுமார் 90 ஆயிரம் மாணவர்களில் 50 சதவீதம் பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு அதிக மதிப்பெண் அளிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த ஒரு செமஸ்டரில் மட்டும் மாணவர்களிடம் இருந்து ரூ.40 கோடி வரை பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக உமா இருந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை இந்த ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு எழுந்துள்ளது. இதையடுத்து போலீசார் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முதல் கட்டமாக தேர்வுத் துறையில் பணிபுரிந்த அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 100 மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

லஞ்ச ஒழிப்புப் போலீசார் இதுவரை நடத்தியுள்ள சோதனை மற்றும் விசாரணை மூலம் தேர்வுகள் மறு மதிப்பீட்டில் ஊழல்களுக்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு திட்டமிட்டு கூடுதல் மதிப்பெண் அளித்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. இதுபற்றி தேர்வுத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மறுமதிப்பீடு ஊழலை உறுதிப்படுத்த மாணவர்கள் எழுதிய தேர்வுதாளை தடயவியல் சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மாணவர்கள் எழுதிய தேர்வுத்தாள்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த சோதனை முடிவில் வரும் தகவல்களை வைத்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேடுகளில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பேராசிரியர்கள் பணம் வாங்கிக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் அவர்களை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எழுதும் தேர்வுத் தாள்கள் சுமார் ஓராண்டு வரை பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள். ஆனால் மறுமதிப்பீட்டில் ஊழல் நடந்து இருப்பது அம்பலமான நிலையில் அந்த மறுமதிப்பீடு விடைத்தாள்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

போலீசார் பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் முறைகேடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டுத்துறையில் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பணியில் இருந்த அதிகாரிகளை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளனர். அந்த அதிகாரிகளுக்கு ஒரு வாரத்துக்குள் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவுக்கு முதலில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. அப்போது அவர்களிடம் விடைத்தாள்கள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேடுகள் பற்றி கேள்விகள் கேட்கப்படும். போலீசார் ஏற்கனவே கைப்பற்றி வைத்திருக்கும் ஆதாரங்களை காட்டியும் விசாரணை நடத்தப்படும்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுத்துறை அதிகாரிகளின் வீடுகளில் கடந்த மாதம் போலீசார் சோதனை நடத்திய போது சொத்து ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். அந்த சொத்துக்கள் எப்படி வாங்கப்பட்டன என்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக அவர்கள் சொத்து குவித்து இருக்கிறார்களா என்பது அப்போது தெரிய வரும். அதன் அடிப்படையில் அதிகாரிகள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல மறுமதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் பற்றி தடயவியல் சோதனை முடிவுகள் வந்ததும், அந்த விடைத்தாள்கள் மீண்டும் அண்ணா பல்கலைக்கழக குழுவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அந்த விடைத்தாள்கள் மீண்டும் மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு தேர்வு எழுதிய சுமார் 3 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்கள் அழிக்கப்பட்ட நிலையில் மறுமதிப்பீடுக்கு உள்ள விடைத்தாள்கள் மட்டுமே ஆதாரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது

You might also like More from author