லண்டனில் இந்திய குடும்பத்தை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க் உட்பார்க் பகுதியில் வசித்து வருபவர் மயூர் கார்லேகர் (வயது 43). இந்தியாவை சேர்ந்த இவருக்கு ரீது என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.கடந்த சனிக்கிழமை இரவு மயூர் கார்லேகர் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டுக்கு 4, 5 இளைஞர்களைக் கொண்ட கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பினர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே மயூர் கார்லேகர் குடும்பத்தினரை எழுப்பி விட்டனர். இதனால் அவர்கள் உயிரோடு எரித்துக்கொல்ல நடந்த முயற்சியில் இருந்து தப்பினர். உடனடியாக தீயணைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இது குறித்து மயூர் கார்லேகர் கூறும்போது, “நாங்கள் தூங்கிக்கொண்டிருந்த வேளையில் அக்கம்பக்கத்தினர் உரிய வேளையில் தட்டி எழுப்பியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். சரியான நேரத்தில் இந்த அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாது. வாழ்நாளில் எல்லோருக்கும் உதவிகள் செய்து வந்திருக்கிறோம். இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்து உள்ளது” என்று குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் பதிவான ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மாநகர போலீசார் துப்பு துலக்குகின்றனர்.

You might also like More from author