சென்னையில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல்-மாநகராட்சி அறிவிப்பு.!

சென்னையில் ரோடுகள், தெருக்களில் பல நாட்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.

சாலைகள், தெருக்களில் நீண்ட நாட்களாக ஒருசிலர் பழுதடைந்த வாகனங்களை நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் வாகனங்களில் தூசி அடைத்து கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

இது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், மாநகர போக்குவரத்து போலீசார், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்கள், ரோடுகள், நடைபாதைகளில் உள்ள வாகனங்களை 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்தாவிட்டால் போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டது.

சென்னையில் சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து 3 இடங்களில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வடசென்னை 1 முதல் 5 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ராயபுரம் மண்டலம் அவதான பாப்பையா தெருவில் உள்ள மாநகராட்சி இடத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

மத்திய சென்னை 6 முதல் 10 வரையிலான மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் கெங்கு ரெட்டி சுரங்க பாதை மேயர் சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள தார்கலவை செய்யப்படும் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

தென்சென்னை 11 முதல் 15 மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பள்ளிக்கரணை பஞ்சாயத்து பூங்கா வளாகத்தில் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் அந்த வாகனங்கள் அங்கு வைத்து மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய சான்றிதழ்கள், அபராத தொகை செலுத்தி ஏலம் விடும் முன் நிபந்தனைகளுடன் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் இந்த புதிய திட்டத்துக்கு பொதுமக்கள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்

You might also like More from author