கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த திட்டம்-பிரதமர் மோடி

Prime-Minister-Narendra-Modi-

உயிர் எரிபொருள் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூ.12 ஆயிரம் கோடி மிச்சப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலக உயிரி தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், உயிர் எரிபொருளானது, கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கும். சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கொடுக்கும். கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் பெருகும்.

பெட்ரோலில் எத்தனால் கலப்பது, 2002ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டது . ஆனால், பின்னால் வந்த அரசுகள் இதில் கவனம் செலுத்தவில்லை. மீண்டும் 2014 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் தான் இந்த திட்டம் மீண்டும் துவக்கப்பட்டது.

மத்திய அரசின் தொடர் முயற்சி காரணமாக, 2013-2014ல் 38 கோடி லிட்டர் எத்தனால் கலந்த பெட்ரோல் தயாரிக்கப்பட்டது. இது, 2017 – 18 ல் 141 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் இறக்குமதியில் அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. அடுத்த 4 ஆண்டிற்குள் 450 கோடி லிட்டர் எத்தனால் கலந்த பெட்ரோல் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 12 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்த முடியும்.

உயிரி எரிவாயு சுத்திகரிப்பு ஆலைகள், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 12 ஆலைகள் நிறுவப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு பிரதமர் கூறினார்.

You might also like More from author