குற்றாலத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சென்னை அசோக்நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று சொன்னாலும், முக்கியமாக 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.
இதற்கிடையே, தீர்ப்பு எப்போதும் வெளியாகலாம் என்ற நிலை இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெற்றிவேலை தவிர மீதமுள்ள 17 பேரையும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றாலத்தில் சென்று தங்கியிருக்குமாறு டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக நேற்று மாலை தங்க தமிழ்செல்வன், மாரியப்பன் கென்னடி, கதிர்காமு ஆகிய 3 பேரும் விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து காரில் குற்றாலம் சென்றுள்ளனர். அங்குள்ள ‘இசக்கி ரிசார்ட்’ சொகுசு விடுதியில் அவர்கள் தங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘இசக்கி ரிசார்ட்’ சொகுசு விடுதி, முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இவர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like More from author