லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமின் வரும் 20-ம் தேதி வரை நீட்டிப்பு

பீகாரில் நடந்த கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவை ஆறுவார காலம் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமினில் விடுவித்து ராஞ்சி ஐகோர்ட் கடந்த மே மாதம் 11-ம் தேதி உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் இருமுறை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த லாலு சிகிச்சைக்காக மே மாதம் 19-ம் தேதி பாட்னாவில் இருந்து மும்பை புறப்பட்டு சென்றார்.

மும்பை நகருக்கு வந்தடைந்ததும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மும்பை நகரில் உள்ள ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் உடனடியாக லாலு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தேறிய பின்னர் மும்பை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட லாலு கடந்த  8-7-2018 பாட்னாவில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது அவரது ஜாமின் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இதற்கிடையில், உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால் கடந்த 6-ம் தேதி மும்பைக்கு அழைத்து வரப்பட்ட லாலு ஏசியன் நெஞ்சக நோய் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், லாலுவின் ஜாமினை நீட்டிக்குமாறு ராஞ்சி ஐகோர்ட்டில் அவரது வழக்கறிஞர் பிரபாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை பரிசீலித்த ஐகோர்ட் நீதிபதி அபரேஷ் குமார், மருத்துவ சிகிச்சைக்காக லாலுவுக்கு முன்னர் அளிக்கப்பட்ட ஜாமினை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளார்

You might also like More from author