சபரிமலை வழக்கில் தேவசம் போர்டு ‘பல்டி’ – தீர்ப்பை ஒத்திவைத்தது, சுப்ரீம் கோர்ட்டு

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து கேரள மாநிலத்திலும், சபரிமலை பகுதியிலும் பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடந்தன.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அமைப்பினர் மற்றும் தனிநபர்கள் தரப்பில் 54 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ரோகிண்டன் பாலி நாரிமன், டி.ஒய். சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் நாயர் சேவை சொசைட்டி, ஸ்ரீஅய்யப்பன் கோவில் தலைமை தந்திரி, ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல்கள் கே.பராசரன், வி.கிரி, அபிஷேக் சிங்வி, சேகர் நாப்டே, கே.ஆர்.வெங்கட்ரமணி ஆகியோர் வாதாடினர்.

கே.பராசரன் தனது வாதத்தில், ‘‘சபரிமலை அய்யப்பன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, நைஷ்டிக பிரமச்சாரிய நிலை இருந்தது. அதை யாரும் மாற்ற முடியாது. அய்யப்பன் விக்கிரகத்தை 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் பார்க்கக் கூடாது. இது பரம்பரை பரம்பரையாக கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். ஒரு விக்கிரகத்தை வழிபடும் உரிமை, அந்த விக்கிரகத்தின் தன்மை மற்றும் அந்த கோவிலின் அடிப்படை நடைமுறைகளை சார்ந்த வி‌ஷயம்’’ என குறிப்பிட்டார்.

மேலும், ‘‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்காதது தீண்டாமை; இது அரசியல் சாசன பிரிவு 17–க்கு (தீண்டாமை ஒழிப்பு) எதிரானது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது வரலாறு மற்றும் பாரம்பரியம் தொடர்பான வி‌ஷயங்களின் சம்பிரதாயத்தை புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவு. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது’’ என்று குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் குறுக்கிட்டு, ‘‘சபரிமலையில் தீண்டாமை இல்லை என்கிறீர்கள். அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காதபோது அவ்வாறு தானே நினைக்க வாய்ப்பு உள்ளது?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கே.பராசரன், ‘‘அவ்வாறு இல்லை, குறிப்பிட்ட வயது பெண்களை மட்டும் காலம் காலமாக அனுமதிப்பதில்லை, இது முற்றிலும் மத நம்பிக்கை சார்ந்தது. சபரிமலை கோவிலில் தீண்டாமையோ, சாதி, மத பாகுபாடோ எதுவும் இல்லை. உரிய கோவில் மரபுகளை பின்பற்றி யார் வேண்டுமானாலும் வரலாம், அவ்வாறான மரபு தான் குறிப்பிட்ட வயதுடைய பெண்களை அனுமதிக்காமல் இருக்கும் நடைமுறை’’ என்று பதில் அளித்தார்.

மூத்த வக்கீல் வி.கிரி வாதிட்டபோது, ‘‘எந்த ஒரு நம்பிக்கை பிரத்யேகமாக பல ஆண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றதோ, அது எவ்வாறு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று கூற முடியும்?’’ என கேள்வி எழுப்பினார்.

தேவசம் போர்டின் முன்னாள் தலைவர் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, ‘‘சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கவே படுவதில்லை என்பது இல்லை, குறிப்பிட்ட வயது பெண்கள் மட்டுமே அனுமதி மறுக்கப்படுகிறார்கள். இது அந்த கோவில் விக்கிரகத்தின் தன்மையின் அடிப்படையில் அமைந்தது’’ என்று வாதிட்டார்.

மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, ‘‘இந்த விவகாரம் குறிப்பிட்ட மதம் சார்ந்த உள் விவகாரம், மரபு, சம்பிரதாயம், நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. இவற்றை ஒரு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கை சார்ந்த வி‌ஷயமாகவே பார்க்க வேண்டும்’’ என்றார். இதையே மூத்த வக்கீல் வெங்கட ரமணியும் வலியுறுத்தினார். வக்கீல்கள் கோபால் சங்கர நாராயணன், சாய் தீபக் ஆகியோரும் வாதிட்டனர்.

கேரள அரசு தரப்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா தனது வாதத்தில். ‘‘இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தேவை இல்லை’’ என வாதிட்டார். மேலும், ‘‘ ஒருவருக்கு வழிபாடு மறுப்பு என்பது அடிப்படை உரிமையை பறிப்பது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்காதது, தீண்டாமைதான். மாதவிலக்கு காரணங்களை காட்டி மறுப்பது அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்’’ என்றார்.

மேலும்,‘‘ அய்யப்பன் கோவில் அனைவருக்கும் பொதுவானது, பொதுவான ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட பாலினத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுவது அனைவரும் சமம் என்று வரையறுத்துள்ள அரசியல் சாசனத்துக்கு எதிரானது. பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று இந்து மதத்தில் இல்லை. எனவே தீர்ப்பை ரத்து செய்வதற்கான முகாந்திரம் இல்லை. அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரளா அரசாங்கம் அனைத்து வகையிலும் முனைப்புடன் உள்ளது’’ என கூறினார்.

அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கும் வி‌ஷயத்தில், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தேவசம் போர்டு, இப்போது ‘பல்டி’ அடித்தது. அதன் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் த்விவேதி, ‘‘எந்த வழக்கமும், சம்பிரதாயமும், நடைமுறையும் ஒருவரின் சம உரிமைக்கு எதிரானதாக அமைந்தால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது’’ என்றார்.

அப்போது மூல வழக்கு தீர்ப்பில், சபரிமலையில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி இந்து மல்கோத்ரா, ‘‘இந்த வழக்கு விசாரணையின்போது தேவசம் போர்டு கோவிலில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று வாதத்தை முன்வைத்ததே?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு ராகேஷ் த்விவேதி, ‘‘தற்போது தேவசம் போர்டு கோர்ட்டு தீர்ப்பை மதித்து, அதை ஆதரிப்பது என முடிவு எடுத்துள்ளது. இந்த தீர்ப்பு சமூக நீதியை வலியுறுத்துகிறது. எனவே ஆதரிக்கிறோம். அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என இப்போது வாதிடுகிறோம், சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தேவையில்லை’’ என்று கூறினார்.

சபரிமலைக்கு சென்ற 2 பெண்கள் தரப்பில் மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங் வாதிட்டார். அத்துடன் விசாரணை முடிந்தது.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் அனைத்து தரப்பினரும் தங்கள் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

You might also like More from author