காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8-ம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால்,  பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தினர்.

 

தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லா, முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி ஆகியோர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பிரதான கட்சிகள் இரண்டும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் வரும் ஜனவரி வரை ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் தலைமையிலான மாநில ஆலோசனைக் கவுன்சில் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

தேர்தலை புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் கொடுக்க மத்திய அரசு விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like More from author