கேரளாவில் ரூ. 2.40 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

கோவையில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஹவாலா பணம் கடத்தி செல்லப்படுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்நது கோவை – பாலக்காடு- மலப்புரம் மாவட்ட எல்லைகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்றது.பாலக்காடு பட்டாம்பி அருகே உள்ள குலுக்கல்லூரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது ஒற்றப்பாலம்- செர்புளச்சேரி-கொப்பம் வழியாக மலப்புரம் நோக்கி ஒரு மாருதி கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது கார் ஹேண்ட் பிரேக்கினுள் அமைத்த ரகசிய அறைக்குள் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். எந்தவித ஆவணங்களும் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 2 கோடியே 40 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மலப்புரம் மாவட்டம் கல்பகஞ்சேரியை சேர்ந்த முகமது தஸ்லீக் (26), சையத் சிஹாபுதீன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கோவையை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மலப்புரம் கல்பகஞ்சேரியை சேர்ந்த பாசில் என்பவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கோவையில் இருந்து மலப்புரத்துக்கு இந்த பணம் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக கோவையை சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்

You might also like More from author